ஆசிய கோப்பை: பாக்.கேப்டனுடன் கை குலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ்..? உண்மை நிலவரம் என்ன..?

image courtesy:PTI
ஆசிய கோப்பை போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 8 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டனர்.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலகக்கோப்பை அடிப்படையில் மாற்றப்பட்டது. அதாவது அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த தொடரில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் 3 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் இந்தியா - யுஏஇ அணிகள் மோதுகின்றன.
முன்னதாக இந்த தொடருக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் 8 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலும் 8 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இந்த நிகழ்வின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆஹாவுடன் கை குலுக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் இரு அணிகளின் கேப்டன்களும் கை குலுக்குவதை தவிர்த்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் இருவரும் ஒருவரையொருவர் விட்டு விலகிச் செல்வதை போல் வீடியோ வைரலானது.
ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் இருவரும் ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்ட வீடியோ வைரலாகி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அந்த வீடியோவில் சூர்யகுமார் யாதவ் - சல்மான் ஆஹா கை குலுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.






