ஆசிய கோப்பை: எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா-பாக். ஆட்டம்.. இரு அணிகளின் கேப்டன்கள் கூறியது என்ன..?


ஆசிய கோப்பை: எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா-பாக். ஆட்டம்.. இரு அணிகளின் கேப்டன்கள் கூறியது என்ன..?
x

ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.

இதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் இந்தியா - யுஏஇ அணிகள் மோதுகின்றன.

இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

முன்னதாக இந்த தொடருக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் 8 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலும் 8 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் குறித்து இரு அணிகளின் கேப்டன்களிடமும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “களத்தில் ஆக்ரோஷம் எப்போதும் இருக்கும். ஆக்ரோஷம் இல்லாமல் இந்த விளையாட்டை விளையாட முடியாது. இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. களத்தில் இறங்குவதற்கு நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

மறுபுறம் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா கூறுகையில், “எந்த வீரரிடமும் எதுவும் சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் வேறுபட்டவர்கள். களத்தில் எங்களது அணி வீரர்கள் யாராவது ஆக்ரோஷமாக செயல்பட விரும்பினால் அதை வரவேற்போம். வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார்கள், அதை நீங்கள் தடுக்க முடியாது, ஏனெனில் அதுதான் அவர்களை முன்னோக்கி கொண்டு செல்கிறது” என்று கூறினார்.

1 More update

Next Story