துலீப் கோப்பை இறுதிப்போட்டி: படிதார், யாஷ் ரத்தோட் அபார சதம்.. வலுவான நிலையில் மத்திய மண்டல அணி

image courtesy:twitter/@BCCIdomestic
தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பெங்களூரு,
62-வது துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு- மத்திய மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி (5 நாள் ஆட்டம்) பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தன்மய் அகர்வால் 31 ரன்கள் அடித்தார். மத்திய மண்டலம் தரப்பில் சரன்ஷ் ஜெயின்5 விக்கெட்டுகளும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய மண்டலம் 511 ரன்கள் குவித்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 194 ரன்களும், படிதார் 101 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் மத்திய மண்டலம் முதல் இன்னிங்சில் 362 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் 362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டலம் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மரன் ரவிச்சந்திரன் 37 ரன்களுடனும், ரிக்கி புய் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தெற்கு மண்டலம் இன்னும் 233 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் மத்திய மண்டலம் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வலுவான வாய்ப்புள்ளது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






