இந்தியா-பாகிஸ்தான் உறவு இதைவிட மோசமாக இருந்த காலங்களில் கூட.. - சல்மான் ஆஹா பேட்டி


இந்தியா-பாகிஸ்தான் உறவு இதைவிட மோசமாக இருந்த காலங்களில் கூட..  - சல்மான் ஆஹா பேட்டி
x

ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்குவதை தவிர்த்து வருகின்றனர்.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. 41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக நடப்பு தொடரில் இவ்விரு அணிகள் மோதிய லீக் மற்றும் சூப்பர்4 சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்து விட்டனர். இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த சூழலில் இவ்விரு அணிகளும் நடப்பு தொடரில் மீண்டும் 3-வது முறையாக மோத உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இறுதிப்போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆஹா அளித்த பேட்டியில், “ஓவ்வொருவருக்கும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஒரு வேகப்பந்து வீச்சாளரின் உணர்ச்சியை நாம் தடுத்தால் பிறகு என்ன மிஞ்சும். ஒவ்வொரு வீரருக்கும் தங்களது உணர்ச்சியை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும். களத்தில் வீரர்கள் ஆக்ரோஷமாகவும், உணர்வுபூர்வமாகவும் செயல்படுவதற்கு ஒரு கேப்டனாக ஆதரவாக இருப்பேன். அது அவமரியாதையாக இல்லாத வரை நான் யாரையும் தடுக்க மாட்டேன்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்றாலே எப்போதும் அதிக நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இறுதிப்போட்டி எப்போதும் வித்தியாசமானது. இதில் தவறுகள் நடக்கத்தான் செய்யும். யார் குறைவான தவறு இழைக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்தியாவுக்கு எதிரான முந்தைய 2 ஆட்டங்களில் நாங்கள் அதிக தவறு இழைத்ததால் தோற்றோம். இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியான நெருக்கடியே இருக்கும். எங்களை பொறுத்தவரை அடிப்படையான விஷயங்களில் சரியாக இருக்க வேண்டும்.

இந்த தொடரில் நான் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை. எனது ஸ்டிரைக் ரேட்டும் சரியாக இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் 150 ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்ய வேண்டியது என்பது அவசியமில்லை. ஆனால் சூழநிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். நான் 2007-ம் ஆண்டு 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆட்டத்தில் இருந்து தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் விளையாட தொடங்கினேன். அப்போது இருந்து எந்தவொரு அணிகளும் போட்டி முடிந்ததும் களத்தில் கை குலுக்காமல் இருந்ததை நான் பார்த்ததில்லை.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு இதைவிட மோசமாக இருந்த காலங்களிலும் இரு அணியினரும் கை குலுக்கி இருக்கின்றனர். கை குலுக்காமல் இருப்பது விளையாட்டு உத்வேகத்துக்கு நல்லதல்ல. வெளியில் மீடியாக்கள் மற்றும் மக்கள் சொல்லும் விஷயங்களை அணியால் கட்டுப்படுத்த முடியாது. எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். மீடியாக்கள் மற்றும் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுவதற்காகவே இங்கு வந்து இருக்கிறோம். ஆசிய கோப்பையை வெல்வதே எங்களது இலக்காகும்” என்று கூறினார்.

1 More update

Next Story