ஜோ ரூட்டை முதல் முறையாக பார்த்த போதே தெரிந்தது - மனம் திறந்த சச்சின்


ஜோ ரூட்டை முதல் முறையாக பார்த்த போதே தெரிந்தது - மனம் திறந்த சச்சின்
x
தினத்தந்தி 26 Aug 2025 3:29 PM IST (Updated: 26 Aug 2025 4:48 PM IST)
t-max-icont-min-icon

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஜோ ரூட் தகர்ப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நட்சத்திர வீரருமான ஜோ ரூட், விராட் கோலி, ஸ்டீவ் சுமித், வில்லியம்சன் ஆகியோர் அடங்கிய பேப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். இருப்பினும் மற்ற 3 பேரை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் ஆதிக்கம் செலுத்துகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்து 2-வது இடத்தில் உள்ளார். வரும் காலங்களில் சச்சினை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரராக ஜோ ரூட் உலக சாதனை படைப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சச்சின் தெண்டுல்கர், ஜோ ரூட் குறித்து மனம் திறந்து சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக சச்சின் பேசியது பின்வருமாறு:- “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 130,00 ரன்களை கடந்தது மிகப்பெரிய சாதனை. இன்னும் அவர் நிறைய சாதனைகளை நிகழ்த்துவார். அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2012-ம் ஆண்டு நாக்பூர் நகரில் அவர் அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது அவரை முதல் முறையாக பார்த்தேன்.

அப்போதே அவரது செயல்பாட்டை கவனித்து எங்கள் அணியினரிடம் இங்கிலாந்து அணியின் எதிர்கால கேப்டனாக ஜோ ரூட் மாறுவார் என்று கூறியிருந்தேன். அவர் ஆடுகளத்தின் தன்மையை கணித்த விதமும், அதற்கு ஏற்றாற்போன்று விளையாடிய விதமும் என்னை கவர்ந்தது. அந்த தருணத்திலேயே அவர் மிகப்பெரிய வீரராக வரப்போகிறார் என்பதை நான் உணர்ந்தேன்” என்று கூறினார்.

1 More update

Next Story