ஆசிய அணி கோப்பையை வெல்வதை பார்க்க விரும்புகிறேன் - சமாரி அட்டப்பட்டு


ஆசிய அணி கோப்பையை வெல்வதை பார்க்க விரும்புகிறேன் - சமாரி அட்டப்பட்டு
x

image courtesy; @ACCMedia1

தினத்தந்தி 30 Sept 2025 10:30 AM IST (Updated: 30 Sept 2025 10:30 AM IST)
t-max-icont-min-icon

13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.

கவுகாத்தி,

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை (தவிர்க்க முடியாத காரணத்தால் சில தடவை தாமதம் ஆகியிருக்கிறது) நடத்தப்படுகிறது.

இதன்படி 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.

பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.

இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த தொடர் குறித்து இலங்கை கேப்டன் சமாரி அட்டப்பட்டு கூறுகையில்,

ஒரு ஆசிய நாட்டவராக இந்த முறை ஒரு ஆசிய அணி கோப்பையை வெல்வதை பார்க்க விரும்புகிறேன். அது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அல்லது வங்காளதேசம் எந்த அணியாகவும் இருக்கலாம். சொந்த மண்ணில் ஆடுவது மிகப்பெரிய கவுரவம். இந்த ஆண்டில் ஆசிய அணி கோப்பையை தட்டிதூக்கும் என்று நம்புகிறேன்.

கடந்த ஓராண்டாக நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறோம். இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும். ஏனெனில் அவர்கள் உள்ளூர் சூழலை நன்கு அறிந்தவர்கள். நெருக்கடியை எடுத்துக் கொள்ளாமல் நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். திட்டமிடலை சரியாக செயல்படுத்தினால் எங்களால் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story