

சென்னை,
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.
இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6-வது முறையாக யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுகள். இது திறமை மற்றும் முதிர்ச்சியின் ஒருங்கிணைந்த வெற்றியாகும். நாட்டுக்கு மற்றுமொரு பெருமித தருணத்தை இந்திய அணி வழங்கியுள்ளது.
இறுதிப் போட்டியிலும், இந்தத் தொடர் முழுவதும் வைபவ் சூர்யவன்ஷி வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம் இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும். அடுத்து இந்திய ஆடவர் அணிக்காக உலக அரங்கில் ஆடவுள்ள இந்த இளம் அணியின் நம்பிக்கை மேலும் பல வெற்றிகளாக மாறிட வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.