

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்து உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வருகிற செப்டம்பர் 19ந்தேதி நடைபெறும் ஐ.பி.எல். 2020 போட்டிகளின் தொடக்க ஆட்டத்தில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றன.
கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பு வெளியிட்ட தோனியை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் செல்வாக்கு பெற்ற நபர்களில் ஒருவர் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான ரோகித் சர்மா டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் செல்வாக்கு பெற்ற நபர்களில் ஒருவர். கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளிலும் மற்றும் வெளியேயும் அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அளப்பரியது. தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், அணியை எப்படி கட்டமைப்பது என்பதில் கைதேர்ந்தவர். நீல வண்ணத்தில் அவரை காண நாம் தவற விட்டாலும், மஞ்சள் நிறத்தில் நம்முடன் அவர் இருந்திடுவார்.
வருகிற செப்டம்பர் 19ந்தேதி டாசில் சந்திப்போம் என்று அவர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சி தருகிறது என்றும் ரோகித் தெரிவித்துள்ளார்.