சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - கிறிஸ் வோக்ஸ் அறிவிப்பு

கோப்புப்படம்
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிறிஸ் வோக்ஸ், அவரது 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிறிஸ் வோக்ஸ், அவரது 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படாத நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை கிறிஸ் வோக்ஸ் எடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
36 வயதாகும் கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2034 ரன்களையும், 192 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 122 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடி அவர் 204 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 1524 ரன்களும், டி20 போட்டிகளில் 147 ரன்களும் எடுத்துள்ளார்.
கடந்த மாதம் ஓவலில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் தோள்பட்டை காயத்துக்கு வலது கையில் கட்டுப்போட்ட நிலையிலும் ஒற்றைக்கையால் பேட் செய்ய களமிறங்கி கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.






