சாம்சன் 5-வது இடத்தில் விளையாடுவது ஸ்ரேயாஸ் ஐயருக்கான வழியை... - இந்திய முன்னாள் வீரர்

image courtesy:BCCI
ஆசிய கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் - அபிஷேக் களமிறங்குகின்றனர்.
சென்னை,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எதிர்பார்த்தது போலவே சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். அதனால் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தார். இந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் ஆசிய கோப்பையில் 5-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்குவார் என தெரிகிறது. ஏனெனில் 3-வது மற்றும் 4-வது வரிசையில் திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மாற்ற இயலாது. அதனால் சாம்சன் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சாம்சன் 5-வது வரிசையில் பேட்டிங் செய்வது ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவதற்கான வழியை உருவாக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவே சாம்சனுக்கான கடைசி வாய்ப்பு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “சாம்சனை 5-வது இடத்தில் பேட்டிங் செய்ய செய்வதன் மூலம், அவர்கள் ஸ்ரேயஸ் ஐயர் அணிக்கு திரும்ப வருவதற்கான வழியை ஏற்படுத்துகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. சாம்சன் 5-வது இடத்தில் அதிகம் பேட்டிங் செய்ததில்லை. அந்த இடத்தில் அவர் பேட்டிங் செய்யக் கூடாது. அந்த இடத்தில் பேட்டிங் செய்வது அவரது நம்பிக்கையை பாதிக்கும்.அவருடைய இந்த நிலைமைக்காக நான் அதிகம் மகிழ்ச்சியாக இல்லை. இதுவே கடைசி வாய்ப்பு என்று நான் சஞ்சுவை எச்சரிப்பேன்.
குறிப்பாக அடுத்த 3 இன்னிங்ஸ்களில் சாம்சன் 5வது இடத்தில் சிறப்பாக விளையாடத் தவறினால் ஸ்ரேயாஸ் ஐயர் வருவார் என்றும் அவரிடம் நான் சொல்வேன். அவர்கள் சாம்சனை மிடில் ஆர்டரில் விளையாடச் செய்கிறார்கள். அவரை பினிஷராக பயன்படுத்தப் போகிறார்களா? இல்லை. அது ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கானது. எனவே, சாம்சன் அங்கே விளையாடுவது வெற்றியளிக்குமா? அது ஒரு கேள்வி. ஆசியக் கோப்பையில் ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக நீங்கள் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது நல்லது. ஆனால் டி20 உலகக்கோப்பையில் என்ன நடக்கும்?” என்று கூறினார்.






