டி20 கிரிக்கெட்: மோசமான சாதனையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸி. அணிகளுடன் இணைந்த ஹாங்காங்

ஆசிய கோப்பையில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இலங்கை - ஹாங்காங் அணிகள் மோதின.
அபுதாபி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும்.
இதில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இலங்கை - ஹாங்காங் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் திரட்டியது. அதிகபட்சமாக நிஜாகத் கான் 52 ரன்னும், அன்ஷி ராத் 48 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 68 ரன்கள் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் பீல்டிங்கில் படுமோசமாக செயல்பட்ட ஹாங்காங் அணி மொத்தம் 6 கேட்சுகளை தவறவிட்டது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக கேட்சுகளை தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் ஹாங்காங்கும் இணைந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவும் ஒரு ஆட்டத்தில் 6 கேட்சுகளை தவறவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






