

புதுடெல்லி,
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் லவ் பார் கிரிக்கெட் (கிரிக்கெட் மீது காதல்) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தான் இதுவரை பார்த்ததிலேயே சிறந்த வீரர் வைபவ் சூரியவன்ஷி என்று பாராட்டினார்.
14 வயதிலேயே பேட்டிங்கில் இந்த அபார திறமையை அவர் வெளிப்படுத்துகிறார் என்றால், 16, 18 அல்லது 20 வயதில் எவ்வளவு நல்ல முறையில் அவர் விளையாடுவார் என நினைத்து பார்க்கவே ஆச்சரியம் ஏற்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க் வுட், பட்லரை பார்த்து, இது உங்களிடம் இருந்து வந்த அழகியதொரு பெரிய விசயம். அவரை முழு அளவிலான சூப்பர் ஸ்டாராக நீங்கள் பார்க்கிறீர்களா? அல்லது அவர் தடம் புரண்டு செல்ல கூடிய வாய்ப்பு உள்ளது என நினைக்கிறீர்களா? என கேட்டார்.
அதற்கு பட்லர், உங்களுக்கு தெரியுமோ என்னவோ? எனக்கு அப்படி தெரியவில்லை. அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியிருக்காவிட்டால் நீங்கள் இப்படி கூறலாம். 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பையில் மட்டுமே அவர் விளையாடி உள்ளார் எனலாம். இது ஆச்சரியம் தருகிறது. எனினும், அவர் சீனியர் கிரிக்கெட்டுக்கு இன்னும் வரவில்லை என கூறலாம்.
ஆனால், அவர் ஐ.பி.எல்.லில் சதம் அடித்திருக்கிறார். ஐ.பி.எல்.லின் முதல் பந்திலேயே அவர் சிக்சர் விளாசினார் என்றார். 2026-ம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை இறுதி போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், சூரியவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து சாதனை படைத்ததுடன், அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வெல்ல உதவினார். இந்த சூழலில், பட்லர் இதனை கூறியுள்ளார்.