கில் குறித்து அவதூறு.. சர்ச்சையை கிளப்பிய விராட் கோலியின் வைரல் ஏ.ஐ. வீடியோ

விராட் கோலி இளம் வீரரான கில்லை அவமதிக்கும் விதமாக பேசி இருப்பதுபோல் ஒரு வீடியோ இணையத்தில் வைரலகி வருகிறது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

புதுடெல்லி,

இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அந்த வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி பிட்னஸ் எனும் வார்த்தைக்கு அடையாளமாகவும் திகழ்கிறார். அதனால் அவர் ஏராளமான இளம் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

மேலும் விராட் கோலி எப்போதுமே இளம் வீரர்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். அவர் பல சாதனைகளை செய்தாலும் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படும்போது மனதார பாராட்டும் குணமுடையவர்.

இந்த நிலையில் விராட் கோலி தன்னுடைய இளம் வீரரான கில்லை அவமதிக்கும் விதமாக பேசி இருப்பது போல் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், "கில்லை நான் கூர்ந்து கவனித்து வருகின்றேன். கில் நிச்சயம் திறமையான வீரர்தான். ஆனால் தாம் எதிர்காலத்திற்கான வீரர் என்று காட்டிக் கொள்வதற்கும் ஜாம்பவானாக உருவெடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கில்லால் அடுத்த விராட் கோலியாக எல்லாம் ஆக முடியாது. ஏனென்றால் விராட் கோலி ஒருவர் மட்டுமே.

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி மட்டும்தான் பெஞ்ச் மார்க். இந்த நிலையை அடைய வேண்டும் என்றால் கில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்" என்று விராட் கோலி கூறி இருப்பது போல் அந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது.

விராட் கோலியின் உண்மையான வீடியோவில் சில வார்த்தைகளை பயன்படுத்தி ஏ.ஐ. மூலம் விஷக்கிருமிகள் கில்லை தவறாக விராட் கோலி பேசுவதுபோல் வடிவமைத்து இருக்கிறார்கள்.

முன்னதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் சிக்கல்களை சந்தித்தனர். அந்த வரிசையில் தற்போது விராட் கோலியும் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com