ஷமி எங்கே..? அவர் ஏன் விளையாடவில்லை..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 358 ரன்கள் குவித்தும் இந்தியா தோல்வியடைந்தது.
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி நிர்ணயித்த 359 ரன் என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.
இதில் 2-வது போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பந்து வீச்சு சுமாராக இருந்தது முக்கிய காரணம் என்றே சொல்லலாம். குறிப்பாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் எடுத்தாலும் 8.2 ஓவரில் 85 ரன்களை வாரி வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.
இந்நிலையில் முகமது ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை? என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் லேசான காயத்துடன் சிறப்பாக பந்து வீசிய ஷமி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அதன்பின் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்கை ஆற்றினார்.
ஆனால் அதன்பின் அவர் பிட்டாக இல்லை என்று சொல்லி இந்திய தேர்வுக்குழு கழற்றிவிட்டு வருகிறது. இருப்பினும் அவர் உள்ளூர் தொடர்களில் ஆடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். அதனை சுட்டிக்காட்டியே ஹர்பஜன் சிங் தற்போது விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிகிறது, உங்களிடம் பிரசித் இருக்கிறார். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்தான். ஆனால் அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. உங்களிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் இருந்தனர். நீங்கள் மெதுவாக அவர்களை ஓரங்கட்டிவிட்டீர்கள்.
நமது பவுலிங் பும்ரா இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லையென்றால் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. பும்ரா இல்லாமல் வெற்றி பெறும் கலையை நாம் கற்க வேண்டும். இங்கிலாந்தில் அவர் இல்லாமலேயே சிராஜின் நம்ப முடியாத ஆட்டத்தால் நாம் டெஸ்ட் போட்டிகளை வென்றோம். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அது போன்ற கலவையைக் நீங்கள் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.






