

மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ளன. இதற்கிடையே, சூப்பர் 8 சுற்றுக்கு தற்போது வரை 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அதாவது இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி தகுதிபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு அணிக்கு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
அதாவது, அமெரிக்க அணி அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.
நமீபியா அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால், அந்த அணி எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும், மாறாக தோல்வியை தழுவினால், அமெரிக்க அணி தானாகவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். அதாவது, ரன்ரேட்டில் பாகிஸ்தானை விட அமெரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளதால், அமெரிக்க அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
இரு அணிகளில் எந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது நாளை தெரிந்துவிடும். தனது கடைசி லீக் போட்டியை வெற்றியுடன் முடிக்க நமீபிய அணி போராடும். எனினும், நமீபியா சிறிய அணி என்பதால், அந்த அணியை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தானே முன்னேற அதிகம் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.