2024 ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா? அவரே வெளியிட்ட விவரம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதற்கு பிறகு காயம் காரணமாக எந்த தொடரிலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

மும்பை,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வேளையில் ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பல மாற்றங்களை செய்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் பயிற்சி முகாமில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், ஐ.சி.சி. டி20 தரவரிசையில் நம்பர் 1 வீரருமான சூர்யகுமார் யாதவ் இந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா? என்கிற சந்தேகம் இருந்து வந்தது.

ஏனெனில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய அவர் அதற்கு பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக எந்த தொடரிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். அவர் தற்போது ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்கிற குடல் இறக்க பாதிப்பிற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் காரணமாக அவரால் ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : 'நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடைய உடற்தகுதி குறித்த பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான் ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொண்டது உண்மைதான். அதை தவிர்த்து காலில் எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. தற்போது முழு உடற்தகுதியை எட்டும் பணியில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் உங்களை களத்தில் சந்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com