ஆஷஸ் தொடருடன் ஆஸி. அணியின் 3 முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஓய்வா..? ஹேசில்வுட் பதில்


ஆஷஸ் தொடருடன் ஆஸி. அணியின் 3 முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஓய்வா..? ஹேசில்வுட் பதில்
x

image courtesy:PTI

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

பெர்த்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக 5 போட்டிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதன்படி இந்த தொடரின் முதல் போட்டி வருகிற நவம்பர் 21-ம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த தொடர் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகக்கோப்பையை விட ஆஷஸ் தொடரை வெல்வது மிகவும் முக்கியம் என்று இருநாட்டு ரசிகர்களும் கருதுவது வழக்கம். அதனால் இந்த தொடரில் அனல் பறக்கும். வீரர்களும் மாறி மாறி ஆக்ரோஷத்துடன் மோதுவதால் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த தொடருடன் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பேட் கம்மின்ஸ் (வயது 32), மிட்செல் ஸ்டார்க் (வயது 35) மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் (வயது 34) ஆகியோர் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மூவரும் 30 வயதை கடந்து விட்டதால் ஓய்வு பெற உள்ளதாக கூறப்பட்டன. மேலும் மூவரும் அடிக்கடி காயத்தை சந்திக்க வாய்ப்புள்ளதால் பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டியுள்ளது.

இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தற்போது முதுகு வலி காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். ஆஷஸ் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டும் நோக்கில் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை தவற விட முடிவு செய்துள்ளார். மறுபுறம் ஹேசில்வுட் அடிக்கடி காயத்தை சந்திக்கிறார். மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் மற்று டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தும் நோக்கில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இதனையெல்லாம் கணக்கில் கொண்டு இவர்கள் 3 பேரும் ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜோஷ் ஹேசில்வுட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- “இப்போது எதுவும் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை. ஒருவேளை தொடர் (ஆஷஸ் தொடர்) முடிந்த பிறகு இது குறித்து அமர்ந்து சிந்திக்கலாம். ஆனால் இப்போது எல்லோரும் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தை விரும்புகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் ஏராளமான டெஸ்ட் போட்டிகள் வரவுள்ளன. மற்றொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி முன்னால் உள்ள நிலையில், ஆஷஸ் தவிர எதிர்நோக்குவதற்கு இன்னும் நிறைய உள்ளன. எங்களுக்கு இன்னும் சில ஆண்டுகள் மீதம் இருப்பதாக நினைக்கிறேன்” என்று கூறினார்.

1 More update

Next Story