

புனே,
16-வது இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் மிதுன் மன்ஹாஸ் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் கூறும்போது, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க சாதனை. ஒத்த வயதுடையோர் விளையாடும் கிரிக்கெட்டில் இந்தியாவின் வலிமை பிரதிபலிக்கப்பட்டு உள்ளது.
போட்டி தொடர் முழுவதும் இந்த அணி நம்பிக்கை மற்றும் நற்பண்புடன் விளையாடியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் பட்டங்களை வென்றது என்பது அதிக பெருமைக்குரிய விசயம். நம்முடைய கிரிக்கெட் கட்டமைப்பின் ஆழம் இதனால் வெளிப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா, பி.சி.சி.ஐ. இணை செயலாளர் பிரபதேஜ் பாட்டியா உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
16-வது இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 6-வது முறையாக யு19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த இறுதி போட்டியில், 80 பந்துகளில் 175 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, இளையோர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 150-க்கும் கூடுதலான ரன்களை சேர்த்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.