மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணி - 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்

Image Courtesy: @BCCIWomen
இந்த அணியில் மந்தனா, ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் தங்களது முதல் மகுடத்துக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டின. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர்.
இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.
இந்நிலையில், இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை வைத்து சிறந்த அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இந்த அணியில் மந்தனா, ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு லாரா வோல்வார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த அணி விவரம்: ஸ்மிருதி மந்தனா (இந்தியா), லாரா வோல்வார்ட் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இந்தியா), மரிசான் கேப் (தென் ஆப்பிரிக்கா), ஆஷ்லே கார்ட்னெர் (ஆஸ்திரேலியா), தீப்தி சர்மா (இந்தியா), அன்னபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), நாடின் டி கிளெர்க் (தென் ஆப்பிரிக்கா), சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர், பாகிஸ்தான்), அலனா கிங் (ஆஸ்திரேலியா), சோபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து).
12வது வீராங்கனை - நாட் ஸ்கிவர் பிரண்ட் (இங்கிலாந்து).






