காகிதம் உருவான வரலாறு...!


காகிதம் உருவான வரலாறு...!
x

சில முக்கிய பயன்பாடுகளுக்கு இன்று வரை காகித பயன்பாடு தவிர்க்க முடியாததாக விளங்குகிறது.

உலக வரலாறு தெளிவாக எழுதப்படுவதற்கு முன்பே சில மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து விட்டன. காகிதமும் அவற்றில் ஒன்றே. எகிப்து, இத்தாலி உள்ளிட்ட பழம்பெரும் நாகரிக நாடுகள் எல்லாம் ஓலைகளிலும், விலங்குகளின் தோலிலும் எழுதிக்கொண்டிருந்தபோது காகிதத்தில் எழுதியவர்கள் சீனர்கள். அந்நாட்டில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாய் லுன் என்ற அறிஞர்தான் காகிதத்தைக் கண்டுபிடித்தார் என்பது சீன மக்களின் கூற்று. அவரைப் பற்றி வாய்வழியாக சொல்லப்படும் வரலாறே இது.

கி.பி. 50-ம் ஆண்டு, கையாங் (இன்றைய லேயாங்) என்ற இடத்தில் பிறந்த சாய் லுன், சீன அரசவை அதிகாரியாகப் பணிபுரிந்தார். பேரரசர் ஹீ சீனப் பகுதிகளை ஆட்சி செய்த காலகட்டம் அது. தனது ஆராய்ச்சி குணத்தால், அரசவையிலும், அரசரிடமும் தனி அந்தஸ்தை பெற்றிருந்தார், சாய் லுன். வீணாகப் போகும் மரத்தூள், மூங்கில் துண்டுகள், பழைய மீன்பிடி வலைகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி, மிகவும் மலிவான காகிதத்தை அவர் உருவாக்கினார்.

கி.பி 105-ம் ஆண்டு, தான் தயாரித்த காகித மாதிரிகளை அரசரிடம் அளித்தார் சாய் லுன். அதைப்பார்த்து வியந்த மன்னர், சாய் லுன்னுக்கு பதவி உயர்வும், பரிசுகளும் கொடுத்தார். சீன தேசமெங்கும் சாய் லுன் தயாரித்த காகிதம் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது. சாய் லுன்னின் புகழும் வேகமாகப் பரவியது.

பேரரசர் ஹீயின் ஆட்சி வீழ்ந்து, அவர் சந்ததியைச் சேர்ந்த ஆன் பேரரசனானபோது சாய் லுன்னின் செல்வாக்கும் இறங்கியது. உலகுக்கே ஓர் உன்னத கண்டு பிடிப்பை வழங்கிய 'காகிதத் தலைவன்', உள்ளூர் அரசியலால் பழி வாங்கப்பட்டார். சிறைக்குச் செல்லும்படி அவருக்கு உத்தரவு வர, அதற்கு தன்மானம் இடம் கொடுக்காததால் விஷம் குடித்து உயிர் துறந்தார் சாய் லுன். அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவில் இருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. காகிதம் தயாரிக்கும் யுத்தியை சீனர்கள் நீண்ட காலம் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், அரேபியர்களின் படையெடுப்புக்குப் பின் அந்தக் கலை உலகம் முழுவதும் பரவி இன்று வரை பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாய் லுன்னைப் பற்றி தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சீன வரலாற்றில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை சாய்லுங் காகிதத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், இன்று வரை கூட பலரின் வரலாறு தெளிவில்லாமல் போயிருக்கலாம்.

சீன தேசமெங்கும் சாய் லுன் தயாரித்த காகிதம் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது. சாய் லுன்னின் புகழும் வேகமாகப் பரவியது.


Next Story