வேலூர்; மயான கொள்ளை திருவிழா

வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதில் கடவுள் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
வேலூர்; மயான கொள்ளை திருவிழா
Published on

வேலூர்

வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதில் கடவுள் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

மயான கொள்ளை திருவிழா

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். பல இடங்களில் சாமியை சப்பரத்தில் வைத்து எடுத்து சென்றனர்.

ஊர்வலத்தின் பின்னே பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கடவுள் போல வேடமிட்டு சென்றனர். காளியம்மன் போல வேடமிட்டு சென்றதும், கையில் சூலாயுதம் ஏந்திச்சென்றதும் தத்ரூபமாக இருந்தது.

ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டும் சென்றனர். சில பக்தர்கள் எலும்பு துண்டுகளை வாயில் கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆங்காங்கே உள்ள மயானத்தை அடைந்தது. இளைஞர்கள் பல இடங்களில் ஆரவாரம் செய்தனர்.

சிறப்பு பூஜை

வேலூர்- காட்பாடியை சேர்ந்த பக்தர்கள் பாலாற்றங்கரைக்கு தேரில் சாமியை வைத்து ஊர்வலமாக சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது.

அதுபோல பக்தர்கள் தங்கள் முன்னோர் சமாதிகளுக்கும் சென்று கும்பிட்டனர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

பின்னர் தாங்கள் கொண்டு சென்ற சாமியுடன் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஊர்வலமாக திரும்பினார்கள். அப்போது வழியில் இருந்த பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.

பலத்த பாதுகாப்பு

மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கலையரசி, சுப்புலட்சுமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் நேரம் என்பதால் சாதாரண உடையிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதுபோல மயானக் கொள்ளை ஊர்வலத்திலும் போலீசார் சென்றனர்.

மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூரில் உள்ள முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com