‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ரசிகர்கள் விரும்புகிறார்கள்’’ நடிகர் தனுஷ் பேட்டி


‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ரசிகர்கள் விரும்புகிறார்கள்’’ நடிகர் தனுஷ் பேட்டி
x
தினத்தந்தி 23 July 2017 9:15 PM GMT (Updated: 23 July 2017 9:15 PM GMT)

‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பமாக இருக்கிறது’’ என்று நடிகர் தனுஷ் கூறினார்.

ஐதராபாத்,

‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பமாக இருக்கிறது’’ என்று நடிகர் தனுஷ் கூறினார்.

தனுஷ் பேட்டி

நடிகர் தனுஷ் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– உங்களை இன்னொரு தம்பதி தங்கள் மகன் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்களே? அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:– ஒருவரை தங்கள் மகன் என்று சொல்வதும் நாங்கள்தான் அம்மா, அப்பா என்று ஆதாரங்கள் காட்டுவதும் இப்போதெல்லாம் சுலபமானது. போட்டோக்களை மாற்றுவதும் எளிது. அதனால்தான் என்னுடைய பெற்றோர்கள் என்று அந்த தம்பதியினர் புகைப்படத்தை காட்டியபோது நானும், என் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் சிரித்துக்கொண்டோம்.

அதிர்ஷ்டம்

கேள்வி:– பிரபலமாக இருப்பதால் இதுபோன்ற சிரமங்கள் வருகிறது என்று கருதுகிறீர்களா?

பதில்:– ஆமாம். பிரபலமாக இருப்பதால்தான் இதுபோன்ற ஆபத்துகளும் சூழ்கிறது. ஆனால் இந்த பிரபலம் என்ற அந்தஸ்து எல்லோருக்கும் அமையாது. அதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதிப்பது சாதாரண வி‌ஷயம் இல்லை. அதனால் பிரபலமாக இருப்பதில் எனக்கு சந்தோ‌ஷம்தான். சினிமா தவிர வேறு உலகம் எனக்கு தெரியாது. கடவுள் அருளால்தான் இந்த அளவுக்கு உயரத்தில் இருக்கிறேன்.

ரஜினிகாந்த்

கேள்வி:– நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டிலும் பொறுப்பில் இருக்கிறாரே? அது சரியா?

பதில்:– நான் மற்றவர்கள் விவகாரங்களில் தலையிட மாட்டேன். நான் நடித்த படங்கள், குடும்பம் தவிர வேறு எதை பற்றியும் சிந்திப்பது இல்லை. உண்மையில் எனக்கு பொது அறிவும் குறைவு.

கேள்வி:– ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பீர்களா?

பதில்:– ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் சந்தோ‌ஷப்படுவேன்.

கேள்வி:– ரஜினிகாந்தை சார் என்கிறீர்களே? மாமா என்று அழைக்க மாட்டீர்களா?

பதில்:– சில உறவுகளை வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும். ரஜினி சார் மக்களுடையை மனிதர். அவரைப்பற்றி பொதுஇடத்தில் பேசும்போது சார் என்றால்தான் கவுரவமாக இருக்கும்.

கேள்வி:– மக்கள் மனிதரான ரஜினிகாந்தை முதல்–அமைச்சராக பார்க்க ஆசை இல்லையா?

பதில்:– எனக்கு அரசியல் தெரியாது. ரஜினி சாருக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவர் செய்வார். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்து முதல்–அமைச்சர் ஆனால் சந்தோ‌ஷம்தான். ரஜினி சார் அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் அவரது ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

இவ்வாறு தனுஷ் கூறினார்.


Next Story