விமர்சனம்
கருப்பன்

கருப்பன்
விஜய் சேதுபதி, பசுபதியும், பாபிசிம்ஹா, சிங்கம்புலி தான்யா ஆர்.பன்னீர் செல்வம் டி.இமான் சக்திவேல்
கதையின் கரு: கதாநாயகனையும், கதாநாயகியையும் பிரிக்க முயற்சிக்கும் வில்லன். விஜய் சேதுபதி, ஜல்லிக்கட்டு போட்டியில், சாம்பியன். காளைகளை அடக்குவதில் வீரர்.
Chennai
எந்த வேலைக்கும் போகாமல், நண்பர் சிங்கம்புலியை சேர்த்துக் கொண்டு குடி-கும்மாளம் என்று ஊரை சுற்றி வருகிறார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. யாராலும் அடக்க முடியாத தனது காளையை களத்தில் இறக்குகிறார், பசுபதி. அவருடைய காளையை அடக்க முன்வருகிறார், விஜய் சேதுபதி. இருவருக்கும் இடையே சிலர் கொம்பு சீவுகிறார்கள்.

தனது காளையை அடக்கினால், தங்கை தான்யாவை விஜய் சேதுபதிக்கு திருமணம் முடித்து தர பசுபதி சம்மதிக்கிறார். இந்த போட்டியில், பசுபதியின் காளையை விஜய் சேதுபதி அடக்கி விடுகிறார். அவரை திருமணம் செய்து கொள்ள தான்யாவும் சம்மதிக்கிறார். திருமணத்துக்குப்பின், விஜய் சேதுபதியின் நல்ல குணங்களை புரிந்துக் கொண்டு அவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார், தான்யா.

அவரை ஒருதலையாக நேசித்து வந்த பாபிசிம்ஹா, விஜய் சேதுபதியையும், தான்யாவையும் பிரிக்க சதி செய்கிறார். விஜய் சேதுபதிக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்து, அவருக்கும், பசுபதிக்கும் இடையே சண்டையை மூட்டி விடுகிறார். விஜய் சேதுபதியும், பசுபதியும் அடித்துக் கொள்கிறார்கள்.

இந்த சண்டையை பயன்படுத்தி, விஜய் சேதுபதியை கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறார், பாபிசிம்ஹா. அதோடு தான்யாவையும் கடத்திச் செல்கிறார். விஜய் சேதுபதியும், தான்யாவும் என்ன ஆனார்கள்? பாபிசிம்ஹாவின் சதியை பசுபதி புரிந்து கொண்டாரா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

விஜய் சேதுபதியின் நடிப்பு படத்துக்கு படம் மெருகேறிக் கொண்டே வருகிறது என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம். குடிபோதையில் அவர் செய்யும் ரகளைகளும், வசன விளையாட்டுகளும் ரசிக்க வைக்கின்றன. போதை தெளிந்த பின், அவர் ஆடிய ஆட்டங்களுக்கு வருத்தப்படும் காட்சியில், ஒட்டு மொத்த அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.

தான்யா ஒரு கோணத்தில், கவுதமி, இன்னொரு கோணத்தில், கீர்த்தி சுரேஷ். நடிப்புக்கு புதுசு என்றால், நம்ப முடியாது. காதல், மோதல், சாந்தம், கோபம் என அத்தனை உணர்ச்சிகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார்.
பாபிசிம்ஹா வில்லனாகி இருக்கிறார். அதிக வசனம் பேசாமல், மவுனமாக இருந்து கொண்டே அவர் வில்லத்தனம் காட்டுவது, புதுசு. பாசமுள்ள அண்ணனாகவும், ஒரு பிரிவினருக்கு தலைவராகவும், பசுபதி கதாபாத்திரமாக கண்ணுக்குள் நிற்கிறார். விஜய் சேதுபதிக்கு வலது கையாக வரும் சிங்கம்புலி, சிரிக்க வைக்கிறார். இருவரும் சேர்ந்து செய்யும் ‘காமெடி’க்கு தியேட்டரில் ஏகோபித்த வரவேற்பு.

டி.இமான் இசையில், பாடல்கள் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை, படத்துக்கு வேகம் சேர்த்து இருக்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவு, காட்சிகளை வலுவாக பதிவு செய்து இருக்கிறது. கதையும், காட்சிகளும் சிவாஜி-ஜெயலலிதா நடித்த ‘சவாலே சமாளி’ படத்தை நினைவூட்டுகின்றன. என்றாலும் வேகமான கதையோட்டமும், கிராமத்து வாசனையுடன் கூடிய காட்சிகளும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.


முன்னோட்டம்

மாயவன்

பட அதிபர் சி.வி.குமார் முதன் முதலாக, ‘மாயவன்’ என்ற படத்தின் கதை எழுதி டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தைஅவரும், கே.ஈ.ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

குரு உட்சத்துல இருக்காரு

அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குரு உட்சத்துல இருக்காரு'.

தீரன் அதிகாரம் ஒன்று

‘தீரன் அதிகாரம் ஒன்று’ கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.

மேலும் முன்னோட்டம்