டிடி ரிட்டர்ன்ஸ் : சினிமா விமர்சனம்


டிடி ரிட்டர்ன்ஸ் : சினிமா விமர்சனம்
x
நடிகர்: சந்தானம் நடிகை: சுரபி  டைரக்ஷன்: பிரேம் ஆனந்த் இசை: ஆப்ரோ ஒளிப்பதிவு : தீபக்குமார்

மரண கலாய் கதைக் களத்தைத் தேர்வு செய்துகொண்டு, மனிதர்களும் பேய்களும் சந்திக்கும் தருணங்களை நகைச்சுவையின் வழியே கலகலப்பான கொண்டாட்டமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

சந்தானம்

திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சந்தானம். இவருடைய காதலியான சுரபியின் தங்கை திருமணத்தன்று ஓடிப்போவதால் செலவு செய்த பணத்தை மாப்பிள்ளை விட்டார் திருப்பி கேட்கிறார்கள். அப்போது ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையடித்த பணத்தை சந்தானம் காரில் தற்செயலாக வைக்கிறார்கள். அந்தப் பணத்திலிருந்து காதலியின் பிரச்சினையை தீர்த்து வைக்கிறார் சந்தானம். ஆனால் பிரச்சினை அங்கிருந்து விஸ்வரூபம் எடுக்கிறது. கொள்ளையடித்தப் பணம் எங்களுடையது என்று தங்கையின் சம்பந்தி வீட்டார் பிரச்சினை செய்வதோடு மீதமுள்ள பணத்தைக் கொடுத்தால் எல்லோரும் உயிர் தப்பிக்க முடியும் என்று மிரட்டுகிறார்கள். இதற்கிடையே அந்த மீதி பணத்தை வேறு ஒரு கும்பல் கைப்பற்றி பேய் பங்களாவில் பதுக்கிவிடுகிறது. பணத்தை மீட்க பேய் பங்களாவுக்குள் செல்கிறார் சந்தானம். அங்கு அவர் சந்திக்கும் சவால்கள் என்ன? காதலியை ஆபத்திலிருந்து காப்பாற்றினாரா? என்பது மீது கதை.

'ஹேண்ட்சம் ஹீரோ' லுக்கில் சந்தானம் அழகாக இருக்கிறார். காதலியுடன் டூயட், பேய்களுடன் அரட்டை, நண்பர்களிடம் சேட்டை என தன்னுடைய வேடத்தை முழுமையாக ரசித்துப் பண்ணியிருக்கிறார். குழாய் வழியாக வரும் காற்றை அடைக்க முடியாமல் திண்டாடும் காட்சி ரகளை.

காதலியாக வரும் சுரபிக்கு சிறிய வேடம் என்றாலும் குறையில்லாத நடிப்பு. ரெடின் கிங்ஸ்லி, மாறன், நான் கடவுள் ராஜேந்திரன், பெப்சி விஜயன், தீனா, தங்கராஜ், பிரதீப் ராவத், மூனிஸ்காந்த் என படத்தில் வரும் அனைவரும் தங்கள் பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள். பேய் வீட்டை சுற்றி சுற்றி வரும் காட்சியில் ஒவ்வொருவரும் பண்ணும் ரகளையில் வயிறு ரணகளமாகிறது.

முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியிலும் இருந்திருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும். ஆப்ரோ பின்னணி இசையில் டெக்னிக்கலாக அசத்தியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பாண்டிச்சேரியின் அழகையும், பாழடைந்த பங்களாவையும் அற்புதமாக படம் பிடித்துள்ளார்.

ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் லாஜிக் பார்க்காமல் படம் பண்ணியிருக்கும் இயக்குனர் பிரேம் ஆனந்த் அந்த முயற்சியில் முழு வெற்றி பெற்றுள்ளார். ஜி.பி.முத்து குரல், யு டியூப் விளம்பரம், பேய்க்கு போனில் சாமி பாடல் ஒலிக்கச் செய்வது என படம் முழுவதும் புது ஐடியாக்களை தோரணமாக தொங்கவிட்டிருப்பது அருமை!


Next Story