'எழுது... எழுது... என்று என்னை எழுத வைப்பது எது?' - மனம் திறக்கிறார் கவிஞர் வைரமுத்து


எழுது... எழுது... என்று என்னை எழுத வைப்பது எது? - மனம் திறக்கிறார் கவிஞர் வைரமுத்து
x

பாடல்கள் என்றாலும், கவிதைகள் என்றாலும், ஹைக்கூ என்றாலும் கண்ணை மூடி யோசித்தால், ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் வெண்ணிற உடையில் ஒரு உருவம் மனதில் நிழலாடும். அந்த உருவத்தின், இல்லை உணர்வின் பெயர் தான் வைரமுத்து.

1980-ம் ஆண்டில் பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலமாக திரை உலகில் நுழைந்த வைரமுத்து, 'இது ஒரு பொன் மாலைப் பொழுது...' என்ற பாடல் மூலம் தனது வைர வரிகளால் தமிழை பட்டை தீட்டத் தொடங்கினார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையில் கோலோச்சும் வைரமுத்து, 7 முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். 'கலைமாமணி', 'பத்மஸ்ரீ', 'சாகித்ய அகாடமி' உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளையும், 'கவியரசு', 'கவிப்பேரரசு', 'காப்பிய பேரறிஞர்', 'காப்பிய சாம்ராட்' போன்ற பட்டங்களையும் பெற்ற வைரமுத்து, ஏராளமான கட்டுரைகளையும், கவிதை தொகுப்புகளையும், புதினங்களையும் படைத்துள்ளார், படைத்துக்கொண்டும் வருகிறார். சாதனைகளின் தொகுப்பு, தமிழின் வகுப்பு, கவிஞர் வைரமுத்து 'தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்கு மனம் திறந்தார். தமிழை தனக்கே உரிய பாணியில் இன்னும் அழகுபடுத்தினார். அதன் விவரம் வருமாறு:-



வைரமுத்து யார்? எப்படிப்பட்டவர்?

உலகத்தின் நினைப்புக்கும், என் இருப்புக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. நான் பனிக்கட்டிபோல் கெட்டியானவன் அல்ல; தண்ணீரைப் போல் நெகிழ்வானவன். பொய்யற்ற வாழ்க்கை வாழ முனைகிறவன். நிம்மதிக்குக் குறுக்குவழி நேர்மை என்று நினைப்பவன். உழைப்பைத் தொழுகிறவன். எல்லா மனிதர்களும் என்னைவிட ஒரு வகையில் உயர்ந்தவர்கள் என்று மதிப்பவன்.

உங்களுக்கு முதன்முதலில் வழங்கப்பட்ட சம்பளம்?

சென்னை வானொலி நிலையம், என் கவிதைக்கு வழங்கிய காசோலை. ரிசர்வ் வங்கியில் வரிசையில் நின்று மாற்றினேன். பதினைந்து ரூபாய்.

சினிமாவில் நீண்ட நேரம் எழுதிய பாடல் எது? குறைந்த நேரத்தில் எழுதிய பாடல் எது?

நீண்ட நேரம் எழுதிய பாடல் 'சங்கீத ஜாதி முல்லை...', ஒரு முழு இரவு. குறைந்த நேரத்தில் எழுதிய பாடல் 'எட்டு எட்டா மனுச வாழ்வப் பிரிச்சுக்கோ...', 8 நிமிடங்கள்.



அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்?

'பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்...' என்ற பாடல்.

இதுவரை எத்தனை பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள்?

சற்றொப்ப எட்டாயிரம்.

'பத்மஸ்ரீ' - 'பத்மபூஷண்' - 'கவிப்பேரரசு' என்ற பட்டங் களில் எதை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள்?

பத்மஸ்ரீ - பத்மபூஷண் இரண்டும் பட்டங்கள் அல்ல மதிக்கத்தக்க விருதுகள். ஆனால், பெயரோடு அதை இட்டுக்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது. கலைஞர், முதல்-அமைச்சராய் இருந்தபோது கொடுத்த பட்டம் 'கவிப்பேரரசு'. அது என் பெயரோடு ஒட்டிக்கொண்டது. அதனால் பத்ம விருதுகளை மதிக்கிறேன். பட்டத்தை நேசிக்கிறேன்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி - ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பற்றி?

எம்.ஜி.ஆர் - தன்னை முன்னிறுத்தி நடிப்பைப் பின்னிறுத்தியவர். சிவாஜி - நடிப்பை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தியவர். ரஜினிகாந்த் - உணர்ச்சியை முன்னிறுத்திக் கலையைப் பின்னிறுத்துகிறவர். கமல்ஹாசன் - கலையை முன்னிறுத்தி உணர்ச்சியைப் பின்னிறுத்துகிறவர்.

சமீபத்தில் நீங்கள் எழுதியதில் மனதில் தங்கிய வரிகள்?

'மூன்று பக்கமும் கடல் இருக்கிற தேசம் எங்கள் தேசம், நான்கு பக்கமும் காதல் கொள்வதால் மோசம் என்ன மோசம்?'. இது 'ஜென்டில்மேன்-2' படத்துக்காக நான் எழுதியது.

கவிதைத் தாய் அழைக்காமல் போயிருந்தால் வைரமுத்து என்னவாக ஆகியிருப்பார்?

ஒரு கல்லூரிப் பேராசிரியராக இருந்திருப்பேன். பாடத்திட்டங்கள் தாண்டிப் பறந்து பறந்து பாடஞ் சொல்லியிருப்பேன். இப்போதும்கூட என் கனவுகள் முடிந்தால், கடமைகள் கடந்தால் ஏதேனும் ஒரு கல்லூரியில் ஊதியமில்லாத பேராசிரியராய் ஊழியம் செய்யவே ஆசை.

உங்கள் பெரும்பாலான இலக்கியங்கள் கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள உங்கள் கவிஞர் தோட்டத்தில் பிறந்தவை தானே?

ஆமாம். 'காணி நிலம் வேண்டும்' என்று பாரதியார் கண்ட கனவை தமிழ் சமூகம் எனக்கு நனவாக்கி கொடுத்திருக்கிறது. கொடைக்கானலில் பெய்த மேகத்தின் மிச்சம் வந்து வந்து வாசல் தெளிக்கும் அந்தச் சூழலில் குளிர்ந்த காற்றும், சூடான தேநீரும் என்னை எழுது எழுதென்று எழுத வைக்கும். 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்', 'மூன்றாம் உலகப்போர்', 'வைரமுத்து சிறுகதைகள்', 'தமிழாற்றுப்படை' எல்லாம் பிறந்தது அங்குதான். 'எந்திரன்', 'தசாவதாரம்', 'ஷாஜகான்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'ராவணன்', 'ரிதம்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'மொழி', 'தென்மேற்குப் பருவக்காற்று', 'தர்மதுரை' போன்ற படங்களின் பாடல்கள் பிறந்ததும் அங்குதான்.



உங்களை மிகவும் கவர்ந்த வெளிநாடு?

சுவிட்சர்லாந்து. மலைக்கு குளிரும் என்று பனிப்போர்வை போர்த்திடும் நாடு. நீச்சல் தெரியாதவன் கூட குதிக்க விரும்பும் நதி. யாருக்கும் தோன்றும், இந்த நாட்டில் காணாமல் போய்விட வேண்டும் என்று. என் ஆழ்ந்த கனவில் சுவிட்சர்லாந்தின் இண்டர்லாகன் சாலையில் ஒரு பறவையின் சிறகைப் பிடித்துக்கொண்டே பயணிக்கிறேன்.

திரைப்பாடல்களுக்கு 7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் நீங்கள். விருதுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மை சற்றே கசப்பாக இருக்கும். இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். விருதும், மரணமும் ஒன்றுதான். ஒருநாள் பேசப்படும். ஒருவாரம் நினைக்கப்படும். ஒரு மாதத்தில் மறக்கப்படும்.

நீங்கள் வந்தபோது இருந்த சினிமா, இன்றைய சினிமா என்ன வேறுபாடு?

கதைநுட்பம், கலைநுட்பம் இரண்டும் குறைந்துபோய் சினிமா தொழில்நுட்பம் ஆகிவிட்டது. மெல்லிசையின் இன்னிசையாக இருந்த பாடல்கள் இன்று சப்தங்களின் சந்தையாகிவிட்டன (சில விதிவிலக்குகள் தவிர). திரையிலும், திரையரங்கிலும் பெண்கள் குறைந்து போனார்கள். சொத்துப் பத்திரம்போல் இருந்த காதல் இன்று துடைத்தெறியும் திசுத்தாள் ஆகிவிட்டது. சில நல்ல படங்கள் ஆறுதல் தருகின்றன.

எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதி. யார் கற்றுத் தந்த பாடம் இது?

உண்மைகளை எதிர்கொள்ளத் தயங்கக்கூடாது. பொய்களைச் சற்றும் பொருட்படுத்தவே கூடாது. மக்கள் மன்றத்திற்கும், அதிகார மையங்களுக்கும் மட்டுமே ஒரு மனிதன் விடைசொல்லக் கட்டுப்பட்டவன். மற்றபடி தொடைக்கறிக்கு ஆசைப்பட்டுத் துரத்திவரும் நாய்களைத் திரும்பிப் பார்ப்பது தேச விரோதம்.

தற்போது எத்தனை படங்களுக்குப் பாடல் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்?

14 படங்கள்

உங்களின் அடுத்த படைப்பு என்ன?



'மகா கவிதை'. இது என் கனவுப் படைப்பு. தமிழில் இதுவரை இல்லாத ஒரு பெரும்பொருளை ஒரே நூலில் பேசும் இலக்கியம். 'மகா கவிதை', ஐம்பூதங்கள் பாடுவது. நான்கு திசைகள் அளந்தது. மூன்று காலங்கள் அளாவியது. ஈருலகை இணைப்பது. ஒற்றை பூமியை உயர்த்திப் பிடிப்பது. சில மாதங்கள் பொறுத்திருங்கள், சென்னையில் ஒரு பெரிய விழா இருக்கும்.

உங்களின் வெள்ளை குர்தாவின் ரகசியம் தான் என்னவோ?

அது என்னை உடுத்திக் கொள்கிறது.

ஓயாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள், எதுவரைக்கும்?

உடம்புக்கு மட்டுமே வாழ்கிற வாழ்வு ஒவ்வொருவருக்கும் வாய்க்கும், அதுவரைக்கும்.

இவ்வாறு எதார்த்தமாய் முடித்தார் 'கவிப்பேரரசு' வைரமுத்து.


Next Story