திரைப்பட பைனான்சியர் அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்


திரைப்பட பைனான்சியர் அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 Nov 2017 5:46 AM GMT (Updated: 25 Nov 2017 5:46 AM GMT)

திரைப்பட பைனான்சியர் அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் (வயது 43) வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தார். இவர் சசிகுமார் நடத்திவரும் ‘கம்பெனி புரடக்சன்’ நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராகவும் இருந்துவந்தார்.

கடன் தொல்லையால் கடந்த 21-ந் தேதி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடிதத்தில், தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனே காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் முதல்கட்டமாக அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரு பிரிவினர் மதுரைக்கும், மற்றொரு பிரிவினர் ராமநாதபுரத்துக்கும் சென்று அன்புசெழியனை தீவிரமாக தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த அன்புசெழியன் தலைமறைவாகி உள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிவோர் என அனைவரும் தலைமறைவாகி உள்ளனர். சசிகுமார் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் தலைமறைவாக உள்ள அன்புசெழியனை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அன்புசெழியன் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story