மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது


மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது
x
தினத்தந்தி 27 Jun 2017 9:00 PM GMT (Updated: 27 Jun 2017 1:18 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,726 கன அடியாக அதிகரித்துள்ளது.

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,726 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையொட்டி நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

5 அடி உயர்வு

நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று காலை முதலே பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பாபநாசம் காரையாறு அணைக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 276 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,096 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் 33.90 அடி உயரம் இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5.10 அடி உயர்ந்து 39 அடியாக இருந்தது.

இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 30.61 அடியில் இருந்து 43.14 அடியாக உயர்ந்து. இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12.53 அடி உயர்ந்தது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 கனஅடியாக மட்டுமே இருந்ததால் நீர்மட்டம் 32.26 என்ற நிலையில் இருந்தது.

குண்டாறு அணை நிரம்பியது

இதுதவிர கடனாநதி அணை நீர்மட்டம் 46 அடியில் இருந்து 48 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 89 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் 45.50 அடியில் இருந்து 49 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 60.67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கருப்பாநதி 25 அடியில் இருந்து 28.54 அடியாகவும், அடவிநயினார் அணை 47.25 அடியில் இருந்து 57 அடியாக உயர்ந்துள்ளது.

குண்டாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 36.10 அடி உயரம் கொண்ட இந்த அணை நேற்று அதிகாலை நிரம்பியது. இதையொட்டி அணைக்கு வருகிற 31 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–

அணை பகுதிகளில் குண்டாறு –93, அடவிநயினார் –62, பாபநாசம் –52, கருப்பாநதி –22, சேர்வலாறு –11, ராமநதி –7, கடனா –3, கொடுமுடியாறு –2, மணிமுத்தாறு –1.

தென்காசி –38.2, செங்கோட்டை –29, ஆய்குடி –20.2, நாங்குநேரி –12, சிவகிரி –8, அம்பை –5, ராதாபுரம் –5, சேரன்மாதேவி –2, சங்கரன்கோவில் –2, நெல்லை –1.2, பாளையங்கோட்டை –1.


Related Tags :
Next Story