மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வரவேற்பு


மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 2 Aug 2017 10:00 PM GMT (Updated: 2 Aug 2017 7:02 PM GMT)

ராமநாதபுரத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலத்திற்கு சின்னக்கடை முஸ்லிம்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

கோவில் திருவிழாக்கள் நடக்கும் மாதம் என்றும், அம்மன் மாதம், என்றும் அம்பாள் மாதம் என்றும் அழைக்கப்பட்டு வரும் ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் சிறப்பு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக அம்மன் கோவில்களில் முளைப்பாரி திருவிழா, கரகம் எடுத்தல், பூக்குழி திருவிழா போன்ற பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி மாதம் தொடங்கிய நாள் முதல் நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆடித்திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் வளர்பிறையில் விதைகளை தூவி பாதுகாப்பாக வளர்த்து 10–ம் நாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கும் முளைப்பாரி திருவிழா ஆங்காங்கே வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 10 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் கரகம் வீதி உலா நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கிட்டும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை அம்மன் முளைப்பாரி சுமந்த பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். புளிக்காரத்தெரு தலைவர் அ.தி.மு.க. நகர் செயலாளர் அங்குச்சாமி முன்னிலையில் கோவில் பூசாரிகள் மனோகரன், நம்புராஜன் ஆகியோர் தலைமையில் 500–க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தங்களின் தலைகளில் சுமந்தபடி பக்தி பரவசத்துடன் அம்மன் புகழ்பாடியபடி வந்தனர்.

ராமநாதபுரம் சின்னக்கடை பகுதிக்கு வந்தபோது அங்கு திரளாக காத்திருந்த வெளிப்பட்டிணம் பாசிப்பட்டறை தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் பூசாரிகளுக்கு ஜமாத் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அப்போது புளிக்காரத்தெருவின் சார்பில் தலைவர் அங்குச்சாமி முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த இந்த வரவேற்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ செய்தது.


Next Story