பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 10:09 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.108 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். நாரணமங்கலம் ஊராட்சியில் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையினால் அப்பகுதி மக்கள் சுகாதாரக்கேடு அடைந்து பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடப்பு ஆண்டில் பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் பிரீமிய தொகையினை மட்டும் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளுக்கு பயிர்க்காப்பீட்டு நிறுவனம் திருப்பி அனுப்பி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். மாட்டு இறைச்சிக்கான தடையை முற்றிலுமாக மத்திய அரசு நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதில் த.மா.கா. கொள்கை பரப்பு செயலாளர் காரை சுப்பிரமணியன், விவசாய அணி மாநில பொறுப்பாளர் கைலாசம், மாவட்ட தலைவர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story