இந்திய தேசிய கொடியுடன் வந்ததால் பாதுகாப்பாக திரும்பினோம். திருப்பத்தூர் மாணவர் பேட்டி


இந்திய தேசிய கொடியுடன் வந்ததால் பாதுகாப்பாக திரும்பினோம். திருப்பத்தூர் மாணவர் பேட்டி
x
தினத்தந்தி 13 March 2022 2:09 PM GMT (Updated: 13 March 2022 2:09 PM GMT)

இந்திய தேசிய கொடியுடன் வந்ததால் பாதுகாப்பாக நாடு திரும்பியதாக திருப்பத்தூர் மாணவர் கூறினார்.

திருப்பத்தூர்

இந்திய தேசிய கொடியுடன் வந்ததால் பாதுகாப்பாக நாடு திரும்பியதாக திருப்பத்தூர் மாணவர் கூறினார்.

திருப்பத்தூர் மாணவர்

திருப்பத்தூரை சேர்ந்தவர் பர்ஹூம் பானு. தி.மு.க. கவுன்சிலரான இவரது மகன் முகமதுசையத் அஸ்ராரி. இவர் உக்ரைன் நாட்டில் யுவோனோ பிராங்களின் நகரில் இரண்டாம் ஆண்டு மருத்தும் படித்து வந்தார். தற்போது உக்ரைன் மீது, ரஷியா போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு சிக்கிதவித்த இந்தியர்கள் மற்றும் மாணவர்களை மத்திய அரசு ‘ஆப்பரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மீட்டு வருகிறது.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர் முகமதுசையத் அஸ்ராரி கூறியதாவது:-

துப்பாக்கியால் சுட்டனர்

யுவோனோ பிராங்களின் பல்கலைக்கழகத்தில் திருப்பத்தூரை சேர்ந்த 10 பேர் உள்பட 100-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் படித்து வருகிறோம். போரின் காரணமாக யுவோனோ பிராங்களின் விமான நிலையம் குண்டு போட்டு தகர்க்கப்பட்டது. இதனால் அங்கிருந்து பஸ் மூலம் ருமேனியா செல்ல முடிவெடுத்து அங்கு உள்ள எல்லையான மூர்சோ சென்ற நிலையில் அங்கு 12 மணி நேரம் காத்திருந்தோம். 

நேரடியாக இந்தியா வரமுடியாத காரணத்தால் பலபேர் எல்லையை நோக்கி நடந்து செல்வதாக கூறியபோது ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, சில மாணவர்களை அடித்தனர். இதனால் பயந்து போய் மீண்டும் இந்தியா செல்ல முடியாமல் யுவோனோ திரும்பிவந்து பல்கலைகழக விடுதியில் தங்கினோம்.

தேசிய கொடியுடன்

பிறகு எங்களுடன் படிக்கும் கேரள மாணவி ஒருவர் மூலம் கிறிஸ்தவ ஆலயம் மூலம் போலந்து நாட்டின் எல்லையான அல்மையூ சென்று அங்கு 3 நாட்கள் தங்கினோம். பிறகு இந்திய தூதரகம் மூலம் டெல்லி வந்தடைந்தோம். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டு திருப்பத்தூருக்கு அழைத்து வந்தனர்.

 இதற்கா முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய தேசியக் கொடிக்கு அங்கு மிகவும் மரியாதை உள்ளது. அதனால் நாங்கள் இந்திய தேசியக் கொடியுடன் வந்ததால் அனைவரும் எங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தனர். தமிழ்நாடுக்கு வந்தது எங்களுக்கு கனவு போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story