பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கம்: ‘ராஜினாமா செய்து விடலாம் என நினைக்கிறேன்’ எல்.கே.அத்வானி வேதனை


பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கம்: ‘ராஜினாமா செய்து விடலாம் என நினைக்கிறேன்’ எல்.கே.அத்வானி வேதனை
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 15 Dec 2016 9:49 PM GMT)

பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதால் மிகுந்த வேதனை அடைந்துள்ள பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விடலாம் என எண்ணுவதாக கூறியுள்ளார். பாராளுமன்றம் முடக்கம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 16–ந்

புதுடெல்லி

பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதால் மிகுந்த வேதனை அடைந்துள்ள பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விடலாம் என எண்ணுவதாக கூறியுள்ளார்.

பாராளுமன்றம் முடக்கம்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 16–ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே ரூபாய் நோட்டு பிரச்சினையை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தை ஓட்டெடுப்புக்கு வகை செய்யும் விதியின் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும், அது முடியாது என ஆளுங்கட்சியும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த கூட்டத்தொடர் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடையும் நிலையில், சொல்லிக்கொள்ளும் படியான எந்த அலுவலும் இதுவரை நடைபெறவில்லை.

இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார்

பாராளுமன்றம் தினந்தோறும் ஒத்திவைக்கப்படுவது பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.பி.யுமான எல்.கே.அத்வானிக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஏற்கனவே கோபத்தை வெளிப்படுத்தி இருந்த அவர், இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆகியோரை குறை கூறி இருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்றும் அறிவித்தார். இதனால் மிகுந்த வேதனை அடைந்த அத்வானி, சபையில் இருந்து எழுந்து செல்லாமல் தனது இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார்.

ராஜ்நாத் சிங்கிடம் அறிவுறுத்தல்

அப்போது அங்கு வந்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தனது வேதனையை பகிர்ந்தார். உடனே இரானி அருகில் நின்று கொண்டிருந்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் இதை தெரிவித்தார். உடனே அவர் சில எம்.பி.க்களுடன் அத்வானிக்கு அருகில் வந்து அவரது மனக்குறையை அமைதியாக கேட்டுக்கொண்டார்.

அவரிடம் பேசிய அத்வானி, ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து நாளைக்காவது (இன்று) விவாதம் நடத்துவதை உறுதி செய்யுமாறு சபாநாயகரிடம் எடுத்துரைக்க கூறினார். அவ்வாறு நடக்கவில்லை என்றால், கூட்டத்தொடர் முற்றிலும் பயனற்று (வாஷ்அவுட்) போனதாக கருதப்படும் என்றும் தனது மனக்குறையை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் தோல்வி

எந்த விதியின் கீழாவது ரூபாய் நோட்டு பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அத்வானி, இதில் யாரும் தங்கள் தரப்பு வெற்றி பெற்றதாகவோ அல்லது தோல்வியடைந்ததாகவோ கருத வேண்டாம் என்றும் கூறினார். கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்படுவது பாராளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும் எனவும் அத்வானி வேதனை தெரிவித்தார்.

பாராளுமன்றம் இவ்வாறு தொடர்ந்து முடக்கப்படுவதால் தனது பதவியை ராஜினாமா செய்து விடலாம் என எண்ணுவதாகவும் அத்வானி கூறினார்.


Next Story