இளம்பெண்ணை ஒரு வாரமாக பின்தொடர்ந்தனர் கைதானவர்கள் பற்றிய பரபரப்பு தகவல்கள்


இளம்பெண்ணை ஒரு வாரமாக பின்தொடர்ந்தனர் கைதானவர்கள் பற்றிய பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 6 Jan 2017 4:19 AM GMT (Updated: 6 Jan 2017 4:19 AM GMT)

பெங்களூரு கம்மனஹள்ளியில் இளம்பெண்ணுக்கு நடு ரோட்டில் வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி, அந்த இளம்பெண் போலீசில் எந்த புகாரும் கொடுக்கவில்லை.

பெங்களூரு,

பெங்களூருவில் நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு கம்மனஹள்ளியில் இளம்பெண்ணுக்கு நடு ரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக அய்யப்பா, லெனின் என்ற லினோ, சோமசேகர் என்ற சோனு, சுதேஷ் என 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் கூடிய விரைவில் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள்.
 
கைதானவர்களில் அய்யப்பா தான் முக்கிய குற்றவாளி ஆவார். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஒரே ஓட்டலில் வேலை செய்து வந்தனர். அந்த ஓட்டலில் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து இளம்பெண் வாங்கி சாப்பிட்டு வந்தார். அந்த உணவுகளை இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று கைதான லினோ, அய்யப்பா கொடுக்க சென்ற போது அவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக இளம்பெண்ணை லினோ உள்பட 6 பேரும் பின் தொடர்ந்துள்ளனர்.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதி இரவு புத்தாண்டை கொண்டாடி விட்டு ஆட்டோவில் கம்மனஹள்ளியில் வந்து இறங்கி தனியாக சென்ற இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று லினோ, அய்யப்பா பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதலில் போலீசாரிடம் சோமசேகர் தான் சிக்கி இருந்தார். அவரிடம் விசாரித்த போது தான் இளம்பெண்ணுக்கு நடு ரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்தது லினோ, அய்யப்பா என்பதும் தெரியவந்தது.

கைதான நபர்களை அடையாளம் காட்டிய இளம்பெண்

பெங்களூரு கம்மனஹள்ளியில் இளம்பெண்ணுக்கு நடு ரோட்டில் வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி, அந்த இளம்பெண் போலீசில் எந்த புகாரும் கொடுக்கவில்லை. அவரின் செல்போன் நம்பர் மட்டும் போலீசாருக்கு கிடைத்தது. அதன்மூலம் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட போலீசார், நடந்த சம்பவங்கள் பற்றி புகார் கொடுக்கும்படி கூறினார்கள். மேலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. அத்துடன் பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை கைது செய்திருப்பதாகவும், அவர்கள் தான் பாலியல் தொல்லை கொடுத்தார்களா? என்பது பற்றி தெரிவிக்கும்படியும் இளம்பெண்ணிடம் போலீசார் கூறினார்கள். 

இதனை ஏற்றுக் கொண்ட அந்த இளம்பெண் நேற்று ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்திற்கு தனது தோழியுடன் வந்தார். பின்னர் கைதான நபர்களின் போட்டோக்களை இளம்பெண்ணிடம் போலீசார் காட்டினார்கள். அந்த போட்டோக்களை பார்த்த இளம்பெண், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, அவர்கள் தான் என்று போலீசாரிடம் அடையாளம் காட்டினார். அதன்பிறகு, நடந்த சம்பவங்கள் பற்றி சில பெண் போலீசார் ஒருவர் இளம்பெண்ணிடம் சில நிமிடங்கள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு, போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

Next Story