சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா?


சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா?
x
தினத்தந்தி 20 Feb 2017 11:12 PM GMT (Updated: 20 Feb 2017 11:12 PM GMT)

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது பற்றிய மனுவின் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

பெண்களை அனுமதிக்கவேண்டும்

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது.

சபரிமலைகோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

நிலைப்பாட்டை மாற்ற முடியுமா?

விசாரணை தொடங்கியதும் நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘இந்த வி‌ஷயத்தில் மதப்பிரிவினர், பக்தர்களின் நம்பிக்கை மற்றும் ஆலயத்தில் பிரவேசம் மறுக்கப்படும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கோர்ட்டு பரிசீலனையில் கொள்ளவேண்டி இருக்கிறது. இந்த வி‌ஷயத்தில் வேறு ஒரு அரசாங்கம் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அவர்கள் முன்பு எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியுமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்று கருத்து தெரிவித்தார்.

திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் தனது வாதத்தில் கூறியதாவது:–

தலையிட முடியாது

ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வரும் ஒரு சம்பிரதாயத்தில் குறுக்கிடுவது சரியானதாக இருக்காது. பல நூற்றாண்டுகளாக இந்த மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கோர்ட்டு இதில் தலையிட முடியாது. அப்படி தலையிட்டால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

இது பெண்களுக்கு எதிரானது அல்ல. கேரளாவிலும், இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள அய்யப்பன் கோவில்களில் பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசியல் சட்டப்பிரிவு 25–ன் அடிப்படையில் ஆலயங்கள் தங்கள் விவகாரத்தை நிர்வகிக்கும் வகையில் உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. பல லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மற்றும் மரபில் குறுக்கிட நீதிமன்றத்துக்கு உரிமை கிடையாது. எனவே, இந்த வழக்கில் பல்வேறு உரிமைகள் குறித்து முடிவெடுக்க இதனை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒத்திவைப்பு

கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா, ‘‘கேரள அரசு பெண்களை சபரிமலையில் அனுமதிக்க தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்ற வகையில் ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக’’ கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவில் கூறப்பட்டுள்ள உரிமைகள் குறித்து முடிவெடுக்க வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்த தங்கள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் இரு வாரங்களுக்குள் இந்த வழக்கில் முன்வைக்கப்படும் முக்கியமான அம்சங்களை எழுத்து வடிவில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆட்சி மாறியதால்...

2007–ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி கேரள அரசு சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. அதன்பிறகு 2011–ல் அமைந்த காங்கிரஸ் கூட்டணி அரசு சபரிமலை கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைவதற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டது.

கடந்த ஆண்டு நடந்த கேரள சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய இடதுசாரி கூட்டணி 2007–ம் ஆண்டு எடுத்த தனது நிலைப்பாட்டையே மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story