உத்தர பிரதேசத்தில் 4 ஆம் கட்ட தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தில் 4 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 53 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லக்னோ,
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட வாக்குப்பதிவுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் 4-ஆவது கட்டமாக 12 மாவட்டங்களில் அடங்கிய 53 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பேரவைத் தொகுதிகளும் இதில் அடங்கும். ஆனால், இந்த தேர்தலையொட்டி, அவர் தனது தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
ரேபரேலி தவிர பிரதாப்கர், கௌசாம்பி, அலாகாபாத், ஜான்சி, லலித்பூர், மஹோபா, ஹமீர்பூர், ஃபதேபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கிய தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அலகாபாத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் உத்தர பிரதேச பாரதீய ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மயுர்யா தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதற்கிடையே, அங்குள்ள மஹோபா என்ற பகுதியில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரிடையே மோதல் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக, சித்கோபால் சாஹூ என்பவர் போட்டியிடுகிறார். இன்று மஹோபா வாக்குச் சாவடியில், அவரது ஆதரவாளர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், பதட்டமான சூழல் காணப்பட்டது.
Next Story






