27 தேர்தல்களில் தோல்வி; ராகுல் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் சேர்க்க விண்ணப்பம்

காங்கிரஸ் 27 தேர்தல்களில் தோல்வி அடைந்ததை சாதனையாக கருதி ராகுல்காந்தி பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்க்க கோரி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான விஷால் திவான் கின்னஸ் நிறுவனத்திடம் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். அந்த விண்ணப்பத்தில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் மேற்பார்வையில்தான் அக்கட்சி போட்டியிட்டு இருக்கிறது. அவ்வாறு ராகுல்காந்தியின் மேற்பார்வையில் நடைபெற்ற 27 தேர்தல்களில் அக்கட்சி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து இருக்கிறது.
இதனை ஒரு சாதனையாக எடுத்துக்கொண்டு ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். விஷால்திவானின் விண்ணப்பத்தை கின்னஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்ட போதிலும், ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்க்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், மணிப்பூர் மற்றும் கோவாவில் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்த போதிலும் உதிரிகட்சிகளின் ஆதரவை பெறமுடியாமல் போனதால் அந்த 2 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமல் சென்ற விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரவேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்தது. இந்நிலையில் இதுபோன்ற விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி வழி நடத்தினார். அப்போது காங்கிரஸ் 10 ஆண்டு கால ஆட்சியை மட்டும் இழக்காமல் படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாமல் சென்றது.
543 தொகுதிகளில் பாரதீய ஜனதா 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியானது. காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டும் வென்றது.
Next Story






