போராட்டம் வாபஸ் பற்றி முடிவு செய்ய விவசாயிகள் 2 நாள் ‘கெடு’

டெல்லியில் போராட்டம் வாபஸ் பற்றி முடிவு செய்ய விவசாயிகள் 2 நாள் கெடு விதித்து உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் போராட்டம் வாபஸ் பற்றி முடிவு செய்ய விவசாயிகள் 2 நாள் கெடு விதித்து உள்ளனர். மத்திய மந்திரியின் உறுதிமொழிக்காக காத்து இருக்க போவதாக அவர்கள் அறிவித்தனர்.
விவசாயிகள் போராட்டம்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய மற்றும் மாநில நதிகளை இணைக்க வேண்டும், தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத்தை முழுமையாக அறிவிக்க வேண்டும், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கைகள் பிரதமர் மோடியின் கவனத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 36–வது நாளான நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி முகமூடி அணிந்த ஒருவர் விவசாயிகளை சாட்டையால் அடித்து விவசாயிகளை கொடுமைப்படுத்துவது போல போராட்டத்தில் ஈடுபட்டனர்.
37–வது நாளாக...சாட்டை அடி பெற்றவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டதாக 37–வது நாளான நேற்று சட்டைகளை கிழித்துக்கொண்டு, தலைமுடியை கலைத்து விட்டு வித்தியாசமான நடை, உடை பாவனைகளை செய்து காட்டினர். இப்படியே அவர்கள் கேரள இல்லம் அருகே அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு வேலி வரை பேரணியாக கோஷங்களையும் எழுப்பியபடி சென்றனர்.
பின்னர் போராட்ட களத்தில் அமர்ந்து அடுத்தகட்ட போராட்டம் பற்றி ஆலோசனை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெரிய நிறுவனங்களுக்கு மோடி அரசு அளித்த சலுகை ரூ.5½ லட்சம் கோடி. கடந்த 15 ஆண்டுகளில் மத்திய அரசு அளித்த சலுகை ரூ.47 லட்சம் கோடி. பெரிய நிறுவனங்களுக்கு காட்டும் சலுகையை விவசாயிகளுக்கு மத்திய அரசு காட்டவில்லை’ என்று குற்றம்சாட்டினார்.
பேச்சுவார்த்தைஇதற்கிடையே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் இருந்து அய்யாக்கண்ணுவுக்கு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்தது. அதன்பேரில் அய்யாக்கண்ணு தலைமையில் சில விவசாயிகள் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சக அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு மாலை 6.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தையில் பழனிவேல், தியாகு, திருச்சி சண்முகசுந்தரம், புதுக்கோட்டை ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘விவசாயிகளுடன் தற்போது நடந்தது 6–வது சந்திப்பாகும். அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும். கோரிக்கைகளில் மாநில அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை மாநில அரசே செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும்’ என்றார்.
ஆலோசனைபோராட்ட களத்துக்கு சென்று மற்ற விவசாயிகளுடன் பேசி முடிவை அறிவிப்போம் என்று அய்யாக்கண்ணு கூறி விட்டு போராட்ட களத்துக்கு சென்றார். அங்கு விவசாயிகளிடம் அவர் பேச்சுவார்த்தையில் நடந்தது குறித்து ஆலோசனை நடத்தினார்.
கடன் வசூலை ஒத்தி வைக்க வேண்டும், விவசாயிகள் பெற்ற கடனை காரணம் காட்டி தேசிய வங்கிகள் ஜப்தி நடவடிக்கை எடுக்கக்கூடாது, மீண்டும் பயிர் செய்ய குறுகிய கால கடன் வழங்க வேண்டும் ஆகிய உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தினர். சிலர், 28–ந் தேதி கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கையை பார்த்துவிட்டு போராட்டத்தை கைவிடலாம் என தெரிவித்தனர்.
2 நாள் ‘கெடு’அதைத் தொடர்ந்து நிருபர்களை அய்யாக்கண்ணு சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தோம். அவர் அதனை நிறைவேற்றி தருவதாக கூறி இருக்கிறார். எனவே நாங்கள் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் டெல்லியிலேயே காத்திருப்போம். எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொண்டதாக நிதி அமைச்சகத்திடம் இருந்து 22–ந் தேதிக்குள் பதில் கடிதம் வந்தால் போராட்டத்தை கைவிட்டு ஊருக்கு செல்வோம். இல்லாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பின்னர் முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்.






