விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர தீவிரம் சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் விரைந்தனர்


விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர தீவிரம் சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் விரைந்தனர்
x
தினத்தந்தி 3 May 2017 3:15 AM IST (Updated: 3 May 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் பேங் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் இருந்து பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாததால் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

புதுடெல்லி,

இதையடுத்து அவர் இந்தியாவில் இருந்து தப்பி லண்டனில் தஞ்சம் அடைந்தார். அவரை கைது செய்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதற்கிடையே கடந்த மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விஜய் மல்லையாவை கைது செய்தனர். ஆனாலும் சில மணி நேரத்துக்குள் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையில் 4 பேர் கொண்ட குழு லண்டன் விரைந்து உள்ளது. இந்த குழுவில் மூத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரும் உள்ளனர்.

விஜய் மல்லையா நாடு கடத்தப்பட வேண்டுமா என்பதை இங்கிலாந்து கோர்ட்டுதான் முடிவு செய்யும். இதில் சி.பி.ஐ. அதிகாரிகளோ, அமலாக்கத்துறை அதிகாரிகளோ தலையிட முடியாது. அவரை நாடு கடத்துவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது இங்கிலாந்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிப்பதாகும்.

எனவே லண்டன் விரைந்து உள்ள இந்திய அதிகாரிகள் விஜய்மல்லையாவுக்கு எதிரான ஆதாரங்களை இங்கிலாந்து வக்கீல்களிடம் ஒப்படைத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவார்கள் என தெரிகிறது.

1 More update

Next Story