‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டால் விபரீதம்: கேரள கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டால் விபரீதம்: கேரள கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2017 11:30 PM GMT (Updated: 20 Aug 2017 9:58 PM GMT)

கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாலக்காடு,

கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை விளையாட்டு

ரஷியாவை சேர்ந்த உளவியல் மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பில் உருவான ‘புளூவேல்’ (நீலத் திமிங்கலம்) எனப்படும் ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இந்த விளையாட்டின் கடைசி சவால் தற்கொலை செய்வது என்பதால், இதை விளையாடிய ஏராளமான இளைஞர்கள் தங்கள் உயிரை விட்டுள்ளனர்.

இந்தியாவிலும் மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சில மாணவர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு உள்ளனர். எனவே இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. ஆயினும் இந்த விளையாட்டு இளையோரின் உயிரை தொடர்ந்து காவு வாங்கி வருகிறது.

கல்லூரி மாணவர்

அப்படி உயிரை மாய்த்தவர்கள் பட்டியலில் கேரளாவை சேர்ந்த ஆஷிக் (வயது 20) என்ற கல்லூரி மாணவரும் இணைந்திருப்பது தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. பாலக்காட்டை சேர்ந்த இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் வணிகவியல் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, அவரது கையில் திமிங்கலத்தின் உருவம் கூரிய ஆயுதம் கொண்டு வரையப்பட்டு இருந்தது. மேலும் அவரது செல்போனை எடுத்து பார்த்த போது, அதில் கைகளில் ரத்தக்காயம் ஏற்படுத்தியது, கடலில் நின்று செல்பி எடுப்பது, வீட்டின் மாடியில் இருந்து குதிப்பது, கல்குவாரி மேல் நிற்பது போன்ற படங்கள் இருந்தன.

தாய் கண்ணீர்

இவை அனைத்தும் ‘புளூவேல்’ விளையாட்டின் சவால்கள் என்பதால், ஆஷிக்கும் ‘புளூவேல்’ விளையாட்டில் ஈடுபட்டு, அதன் முடிவில் தனது உயிரை மாய்த்து இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஷிக்கின் மரணம் குறித்து அவரது தாய் அஸ்மாவி கூறுகையில், ‘ஆஷிக் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லாதபோது ஏன் தற்கொலை செய்ய வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது? தற்போது இந்த ஆன்லைன் விளையாட்டு பலரை பலி வாங்கியதாக கேள்விப்பட்ட பின்னர் அஷிக்கும் இந்த விளையாட்டினால்தான் இறந்திருப்பான் என்ற எண்ணம் தோன்றுகிறது’ என்றார்.

ஏராளமான மாணவர்கள்

முன்னதாக இந்த கொடிய விளையாட்டுக்கு கேரளாவில் 2 கல்லூரி மாணவர்கள் பலியாகி இருந்தனர். அதன்படி திருவனந்தபுரத்தை சேர்ந்த மனோஜ் (19), கண்ணனூரை சேர்ந்த சவாந்த் (19) ஆகிய கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதைப்போல மாநிலத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story