‘தாஜ்மகால், சிவன் கோவில் மீது கட்டப்பட்ட கல்லறை’ பாரதீய ஜனதா தலைவர் கருத்தால் புதிய சர்ச்சை


‘தாஜ்மகால், சிவன் கோவில் மீது கட்டப்பட்ட கல்லறை’ பாரதீய ஜனதா தலைவர் கருத்தால் புதிய சர்ச்சை
x
தினத்தந்தி 19 Oct 2017 10:30 PM GMT (Updated: 19 Oct 2017 8:56 PM GMT)

தாஜ்மகால், சிவன்கோவில் மீது கட்டப்பட்ட கல்லறை என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் வினய் கட்டியார் கூறியது, புதிய சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

லக்னோ,

ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் வீற்றிருக்கிற தாஜ்மகால், உலக அதிசயங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. 14 குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் மறைந்த தனது மனைவி மும்தாஜ் மீது கொண்ட காதலை கவுரவித்து, அவர் நினைவாக மொகலாய மன்னர் ஷாஜகான் எழுப்பியதுதான் இந்த தாஜ்மகால். இதைக் காண்பதற்கு உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் இந்த தாஜ்மகால் பற்றி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வினய் கட்டியார் எம்.பி., கூறிய கருத்துகள் புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளன.

தெஜோ மகால் என்று அழைக்கப்பட்ட சிவன்கோவில்தான் தாஜ்மகால். அதன்மீதுதான் ஷாஜகான் தன் மனைவிக்கு கல்லறை எழுப்பி உள்ளார். அதே நேரத்தில் இந்த அளவுக்கு உலக அதிசயங்களில் ஒன்றாகி, பிரபலமாகியுள்ள தாஜ்மகாலை இடித்து தள்ள விரும்பவில்லை.

சிவன்கோவிலை கட்டியவர்கள் இந்து மன்னர்கள்தான். தாஜ்மகாலில் உள்ள அறைகள், சிற்பங்கள் அவை இந்து நினைவுச்சின்னம் என்பதை நிரூபிக்கிற வகையில் உள்ளன. வரலாற்று ஆசிரியர் பி.என். ஓக் இதை குறிப்பிட்டுள்ளார்.

தாஜ்மகால் நமது இந்துக்கோவில்தான். அதிக அதிகாரம் படைத்தவர்களால் அதன்மீது கல்லறை கட்டப்பட்டு விட்டது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய நினைவுச்சின்னம். தேசிய பாரம்பரியமிக்கது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story