வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு


வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
x
தினத்தந்தி 15 Dec 2017 11:30 PM GMT (Updated: 15 Dec 2017 10:13 PM GMT)

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டி.வி., செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சுங்கவரியை அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிகபட்சமாக 10 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்திய பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க வெளிநாட்டு பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.

மேலும் இந்தியாவில் உள்ள சில செல்போன் நிறுவனங்கள் அதிரடி விலை குறைந்த செல்போன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளன. எனவே இந்திய நிறுவனங்களின் செல்போன்களை மக்கள் வாங்கும் வகையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கு அதிகபட்சமாக 15 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது. தற்போது வெளிநாட்டு செல்போன்களுக்கு சுங்கவரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வெளிநாட்டு டி.வி., எல்.இ.டி. பல்புகள், மைக்ரோவேவ் ஓவன், செட்–டாப் பாக்ஸ், அலங்கார விளக்குகள் ஆகியவற்றுக்கு 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக சுங்கவரி அதிரடியாக உயர்த்தப்படுகிறது. வீடியோ கேமரா, மின்சார மீட்டர் போன்றவற்றுக்கு 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக சுங்கவரி அதிகரிக்கப்படுகிறது.

இந்த தகவல் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story