வருங்கால இந்திய முப்படை அதிகாரிகளுக்கு ஆசைகாட்ட முயற்சித்த பாகிஸ்தான் உளவுத்துறை!


வருங்கால இந்திய முப்படை அதிகாரிகளுக்கு ஆசைகாட்ட முயற்சித்த பாகிஸ்தான் உளவுத்துறை!
x
தினத்தந்தி 17 Dec 2017 9:14 AM GMT (Updated: 17 Dec 2017 9:14 AM GMT)

இந்திய முப்படை அதிகாரிகளுக்கு பெண்களை கொண்டு பாகிஸ்தான் உளவுத்துறை ஆசைகாட்ட முயற்சி செய்து உள்ளது.

புதுடெல்லி,

டாக்காவில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகளை ஆசைகாட்டி, அவர்களை தனக்காக பணியாற்ற செய்ய முயற்சி செய்து உள்ளது தெரியவந்து உள்ளது. டாக்காவில் வருங்கால இந்திய முப்படை அதிகாரிகள் தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர், அவர்களை இலக்காக வைத்து பாகிஸ்தானின் உளவு அமைப்பு செயல்பட்டு உள்ளது. இந்திய படையில் சேர்ந்த பின்னர் அவர்களை கொண்டு தங்களுடைய பணியை முன்னெடுக்க பாகிஸ்தான் உளவுத்துறை இந்நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என்பது தெரியவந்து உள்ளது. 

வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இப்பணியானது கொடுக்கப்பட்டு உள்ளது. இந்திய முப்படை அதிகாரிகளுக்கு பெண்கள் மற்றும் பணத்தை கொண்டு பாகிஸ்தான் உளவுத்துறை ஆசைகாட்ட முயற்சி செய்து உள்ளது.

பிற நாடுகளுடன் இணைந்து செயல்படும் பயிற்சியாக டாக்காவில் உள்ள பயிற்சி மையத்தில் இந்தியாவின் வருங்கால முப்படை அதிகாரிகள் 40 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய உளவுத்துறை ஒரு எச்சரிக்கையை விடுத்து இருந்தது, அதில் அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் சீனா பெண்களை கொண்டு அதிகாரிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்யலாம் என எச்சரிக்கையை விடுத்து இருந்தது. 

உருது பேசும் பாகிஸ்தான் பெண் - ஆங்கிலம் பேசும் சீன பெண் முதலில் இந்திய அதிகாரிகளை சமூக வலைதளத்தில் தொடர்பு கொள்வார்கள். பின்னர், அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கம் காட்டுவார்கள், பின்னர் வீடியோவை கொண்டு மிரட்டுவார்கள், இந்திய படைகளின் நிலை குறித்த தகவல்களை பெற முயற்சி செய்வார்கள் என விளக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் பணியாற்றிவரும் மூன்று அதிகாரிகளை வசியப்படுத்தி, முக்கிய தகவல்களை பெறவும் பாகிஸ்தானில் உளவுத்துறை முயற்சி செய்து உள்ளது என தெரியவந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் அதிகாரிகளின் பெயர்கள் வெளியாகவில்லை, பாகிஸ்தான் உளவுத்துறையின் சதிதிட்டம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. எதிரிநாட்டு ரகசியங்களை தெரிந்து கொள்வதற்கு பெண்கள் கருவியாக பயன்படுத்தப்பட்டு வருவது உலகம் முழுவதும் காணப்படும் சம்பவமாக இருக்கிறது. இந்திய தூதரக அதிகாரிகளையும் இதில் இலக்காக்க பாகிஸ்தான் உளவுத்துறை முயற்சி செய்து உள்ளது, ஆனால் பலன் அளிக்கவில்லை. 

இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மூத்த அதிகாரிகளை உடனடியாக நாடி, புதுடெல்லிக்கு தகவல் தெரிவித்துவிட்டனர். இவ்விவகாரத்தில் இந்திய அதிகாரிகள் தரப்பில் எந்தஒரு தவறும் கிடையாது, இதுவரையில் எந்தஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படுகிறது என செய்திகள் வெளியாகி உள்ளது.

Next Story