டிக்-டாக் செயலி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது


டிக்-டாக் செயலி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது
x
தினத்தந்தி 17 May 2019 3:55 AM GMT (Updated: 17 May 2019 3:55 AM GMT)

நீதிமன்ற தடையையும், அதில் ஏற்றப்பட்ட வீடியோக்கள் பற்றிய சர்ச்சைகளையும் தாண்டி வந்துவிட்டது

‘‘டிக் டாக்’’ செயலி மீது விதிக்கப்பட்ட நீதிமன்ற தடையையும், அதில் ஏற்றப்பட்ட வீடியோக்கள் பற்றிய சர்ச்சைகளையும் தாண்டி வந்துவிட்டது. அதன் புதிய விளம்பர ஹேஸ்டேக்குகளான ரிட்டர்ன் ஆப் டிக்டாக் மற்றும் ஷேர் அண்ட் வின் ஆகிய இரண்டும் சுமார் 70 கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அதன் பயனாளர்களை மீண்டும் ஈர்ப்பதில் வெற்றியும் பெற்றுள்ளது.

அதில் கிடைக்கும் 15 நொடிகள் புகழை விரும்பாதவர்கள் யாருமில்லை.
தமிழகத்திலும், இந்திய அளவிலும் மை டிக் டாக் ஸ்டோரி, டிக் டாக் போலராய்ட், தவுசண்ட்ஸ் ஆப் மீ, ஆரஞ்ச் பேஸ், கிரிக்கெட் லவ்வர், பையர் ஹாண்ட் ஆகிய ஹேஸ்டேக்குகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் கிரிக்கெட் லவ்வர் ஹேஸ்டேக் 140 கோடி பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுபவர்களின் வீடியோக்கள், பிரபல கிரிக்கெட் வீரர்களை போல் நடிப்பவர்களின் வீடியோக்கள், ஐ.பி.எல். ஆட்டத்தை கிண்டல் செய்யும் வீடியோக்கள், கிரிக்கெட் ஆட்டத்தை நையாண்டி செய்யும் வீடியோக்கள் அடங்கும்.

முன்பே பதிவு செய்யப்பட்ட பாடல் வரிகளுக்கு ஏற்ப உதடுகளை அசைப்பது, நடனமாடுவது போன்ற வீடியோக்களை உருவாக்க உதவும் அம்சங்களும் பிரபலமாக உள்ளன. தினசரி வாழ்க்கையின் அனைத்து விஷயங்கள் பற்றியும், 15 வினாடிகள் நீளம் கொண்ட வீடியோக்களை உருவாக்க இந்த செயலி பயன்படுகிறது. ‘‘ஒவ்வொரு தருணத்திலும் வாழுங்கள்’’ என்ற வரி, தினப்படி வாழ்வில் சிறப்பான தருணங்கள் அனைத்தையும் பதிவு செய்ய விரும்பும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. தங்களுக்கு பிடித்த பின்னணி இசையை, இந்த வீடியோக்களுடன் சேர்க்கவும் வசதியுள்ளது.

டைகர் ஷ்ராப், திஷா பதானி, ஷ்ரத்தா கபூர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் டிக் டாக்கில் உள்ளனர். ஆனால் அவர்களின் வீடியோக்கள் பெரும்பாலும், சுய விளம்பரத்திற்கானவையாக உள்ளன. தமிழக பிரபலங்கள் அதிகம் பேர் டிக் டாக்கில் இல்லை. டிக் டாக்கின் நட்சத்திரங்கள் பலருக்கும் தமிழ் படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. 14 லட்சம் டிக் டாக் ரசிகர்களை கொண்ட காயத்ரி ஷா என்பவருக்கு ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்களை பற்றிய வீடியோக்களை உருவாக்கும் பிரகதி ஜாய் என்ற டிக் டாக் பிரபலத்திற்கு, ஏறக்குறைய 5 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

டிக் டாக்கை பயன்படுத்துபவர்கள், மெய்நிகர் காசுகளை விலைக்கு வாங்கி, இதர பயனாளிகளுக்கு அவற்றை அன்பளிப்பாக அளிக்க இதில் வசதி உண்டு. இந்த செயலியின் பிரம்மாண்டமான பயனாளிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, பல பிரபல முதலீட்டாளர்கள், இதில் முதலீடு செய்து வருகின்றனர். பெரு நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் பிரசாரங்களை இடையே ஒளிபரப்புவதன் மூலம் இந்த செயலி நிறுவனம் வருமானம் ஈட்டுகிறது. அதிக எண்ணிக்கையிலான பின் தொடர்பவர்களை கொண்ட பயனாளிகளுக்கும் விளம்பரதாரர்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது.

ஏப்ரல் 3-ந் தேதியன்று இந்த சீன வீடியோ செயலிக்கு, மதுரை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. ஏப்ரல் 30-ந் தேதி இந்த தடை நீக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இழந்த சந்தையை டிக் டாக் மீண்டும் வென்றெடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது. இந்த செயலியின் உரிமையாளரான பைட் டான்ஸ் என்ற நிறுவனம், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க, பல பரிசு திட்டங்களை அறிவித்துள்ளது.

‘‘சேர் அண்ட் வின்’’ என்ற திட்டத்தில், பயனாளிகள், மே 1 முதல் 16-ந் தேதி வரை, டிக் டாக் விளம்பர போஸ்டர்களை ஏதாவது ஒரு சமூக வலைத்தளத்தில் பகிர வேண்டும். தினசரி மூன்று பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது. 2019-ன் முதல் காலாண்டில், 4 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது டிக் டாக். வரும் காலங்களில், இந்திய சந்தையில் 100 கோடி டாலர்கள் முதலீடு செய்யும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

டிக் டாக் வீடியோக்களை பயனாளிகள் உருவாக்கியபோது ஏற்பட்ட விபத்துகளில் பலரும் உயிரிழந்ததால், இது தடை செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரு இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்றபடி, டிக் டாக் வீடியோ எடுக்கும்போது, ஒரு லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. பெண்களை போல் ஆடையணிந்து, ஒரு வீடியோ எடுத்து, அதை டிக் டாக்கில் பதிவு செய்த தமிழக இளைஞர் ஒருவர், அதற்கு எழுந்த கண்டனங்கள், எதிர்வினைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

டெல்லியில் டிக் டாக் வீடியோ எடுக்கும்போது, ஒரு இளைஞர் தன் நண்பரை சுட்டுக் கொன்றுவிட்டார். ஆபாச வீடியோக்களுக்காக உலகெங்கும் இது கண்டனத்திற்குள்ளானது. சிறுவர், சிறுமியர்கள் இதனால் பாதிப்படையாமல் தடுக்க போதுமான பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தவில்லை என்று கண்டனம் எழுந்தது.

தடை செய்யப்படுவதற்கு முன்பும், சில பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும், இதில் இளம் சிறார்கள் கணக்குத் தொடங்கி, பயன்படுத்துவது எளிதாக இருந்தது. கணக்குகளை கைப்பற்றுவதை தடுக்க ஒரு புதிய கருவி மேலாண்மை முறையை டிக் டாக் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அறிவிப்புகளை பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் இருந்து மடல்கள் வருவதை தடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கணக்குகளை, தனிக்கணக்காக மாற்றவும் இப்போது வசதி இருக்கிறது. இந்த தனிக் கணக்குகளில் பதிவேற்றப்படும் வீடியோக்களை அனைவரும் பார்க்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் மட்டுமே பார்க்க இயலும். பயனாளிகளிடம், பாதுகாப்பு அம்சங்களை பற்றிய விழிப்புணர்வை வளர்த்தெடுக்க, ஒரு வினாடி-வினா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிக் டாக்கின் புதிய பாதுகாப்பு அம்சங்களை பற்றி உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்த பைட் டான்ஸ் நிறுவனம், இனி சிறார்கள் இதை பயன்படுத்துவதை தடுக்கும் அம்சங்களை பற்றியும் விவரித்தது. பயனாளிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பார்க்க தகுதியில்லாத 60 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. டிக் டாக்கின் மீது விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்கிய உயர்நீதிமன்றம், ஆபாச வீடியோக்களை மீண்டும் அனுமதித்தால், அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் எதிர்மறையான, பொருத்தமற்ற, ஆபாச வீடியோக்களுக்கான வரையறையை உயர்நீதிமன்றம் தெளிவாக்கவில்லை. 
இதுகுறித்து சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் லலிதா கிரீஷ் கூறுகையில், ‘‘சிறார்கள் தம் மீது கவனம் ஈர்ப்பதை விரும்புகிறார்கள். அவர்களின் வீடியோக்கள் பாராட்டுகளை பெற்றால், பிறகு அதற்கு அடிமையாகி விடுகின்றனர். பிறகு மேலும் மேலும் அதிக வீடியோக்களை பதிவேற்றி, அதிக பாராட்டுக்களை குவிக்க விரும்புகிறார்கள்.

இது அவர்களின் மனநலனை பாதிக்கிறது. இதனால் பெரியவர்களை போல் நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். எளிதில் மனச்சோர்வடைவது, தனிமையை விரும்புவது, யாரிடமும் பழகாமல், தங்களின் போன்கள் மூலமே வெளிஉலகத்துடன் தொடர்புகொள்வது போன்றவை அதிகரிக்கும்’’ என்றார்.

5 லட்சம் பின் தொடர்பவர்களை கொண்ட டிக் டாக் பயனாளியான அபர்ணா சுந்தர்ராமன், ‘‘தகுதியில்லாத வீடியோக்களை சிலரே பதிவேற்றம் செய்கின்றனர். செயலியை முற்றிலும் தடை செய்ததற்கு பதிலாக, அத்தகைய கணக்குகளை மட்டும் தடை செய்திருக்கலாம். நம்முடைய நடிப்பு திறன்களை வெளிப்படுத்த டிக் டாக் ஒரு அருமையான களம். பல டிக் டாக் பயனாளிகளுக்கு தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

காசிப்பூர் ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ படிக்கும், முன்னாள் டிக் டாக் பயனாளியான அகமத் மீரான்: ‘‘டிக் டாக் வெறுப்பை வளர்க்கும் தளமாக ஆகிவிட்டது. எனக்கு 1.3 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர். ஆனால் டிக் டாக் அடைந்த மாற்றங்கள் எனக்கு பிடிக்கவில்லை. பொருத்தமில்லாத வீடியோக்களை பதிவேற்றும் இடமாகவும், வேட்டைகாடாகவும் மாறிவிட்டது. எனவே நான் அதில் இருந்து விலகிவிட்டேன்’’.
  
மூன்றே வருடங்களில், சமூக ஊடக உலகில், டிக் டாக், பெரும் வெற்றியை அடைந்துள்ளது. பைட் டான்ஸ் நிறுவனம் 75 பில்லியன் டாலர் (சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்துள்ளது. புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே தளங்களில் இருந்து இதுவரை உலகெங்கும், சுமார் 100 கோடி பதிவிறக்கத்தை இந்த செயலி எட்டியுள்ளதாக சென்சர் டவர் என்ற நிறுவனம் கணிக்கிறது. இதில் 25 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளது. ஏறக்குறைய 25 கோடி பதிவிறக்கங்கள்

டிக் டாக் செயலியின் சாதக, பாதகங்கள் பற்றிய விவாதங்கள் தொடர்கிறது. இதன் வளர்ச்சியை கண்ட பேஸ்புக் நிறுவனம், இதற்கு போட்டியாக லாஸொ என்ற செயலியை தயாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், பெய்ஜிங்கில் அமைந்துள்ள டிக் டாக் நிறுவன தலைமையகத்திற்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வருகை தந்தார். டிக் டாக் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பதை காலம் தீர்மானிக்கும்.

அவசியமானதா? ஆபத்தானதா?

சாப்பாடு, தண்ணீர் வேண்டாம், தூக்கம் வேண்டாம், படிப்புல அக்கறையும் வேண்டாம்... என எப்போதும் செல்போனிலேயே கிடக்கும் பள்ளி, கல்லூரியின் பதின்ம வயது பிள்ளைகளை எப்படி கையாள்வது என்பது தான் இன்று பெற்றோர்களின் பிரதான கவலையாகியுள்ளது.

அப்படி ஒரு மோகம் என்பதா? வெறி என்பதா? பைத்தியம் என்பதா?..
அல்லது எல்லாமுமேதான் என்பதா..?  ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், இன்று ஒரு தலைமுறையையே அடிமைபடுத்தியுள்ளது இந்த ‘‘டிக் டாக்’’ என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இளம்தலைமுறையினரின் பொன்னான நேரத்தை சூறையாடிவிடுவதில் டிக் டாக்கிற்கு இணையாக சொல்ல வேறில்லை.

இப்போது இந்தியாவில் மட்டுமே சுமார் 12 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். செல்போன் செயலிகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை காட்டிலும் டிக்டாக்கையே இன்று அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பதின்ம வயதுள்ள இளம்தலைமுறையினரே இதன் வடிவமைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள். டிக் டாக் பயன்பாட்டில் 40 சதவீத பள்ளி, கல்லூரி மாணவர்களே பாட்டு, டான்ஸ், நகைச்சுவை.. போன்றவற்றில் தங்கள் திறமைகளை உலகிற்கு தெரியப்படுத்த இளம்தலைமுறைக்கு இது ஒரு வரப்பிரசாதமாக மாறியிருப்பது கண் கூடாகத் தெரிகிறது.

ஆனால், பெரும்பாலானவர்கள் திரைப்பட பாடல்கள், திரைப்பட டான்ஸ்கள், திரைப்பட நகைச்சுவைகளை டப்மாஷ் செய்து டிக் டாக்கில் வெளியிடுகிறார்கள். வீட்டு தொலைக்காட்சிகளில் 24 மணிநேரமும், சதாசர்வ காலமும் இந்த தலைமுறையினர் எதைப் பார்த்து ரசிக்கின்றனரோ... அதிலிருந்து தான் அவர்களின் கற்பனை உருவாகியிருக்கிறது. சுமார் பத்து வயது சிறுவன் கூட இப்படி டிக் டாக் செயலியில் தன்னைத்தானே வெளிப்படுத்தி ரசிகர்களை பெற்றுவிடுகிறான்.

சாக்கோ டி பாய் என்ற இளைஞன் 6 லட்சத்து 40 ஆயிரம் பார்வையாளர்களை கொண்டுள்ளார். இதேபோல ஹேசல் சினி என்ற இளம்பெண் 11 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளார். புக்கரு என்ற பெயருள்ள மலையாள மொழியில் டிக் டாக் செய்யும் இளைஞன் 17 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளார். இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு அதிகம் பார்வையாளர்கள் யார் தயவும் இல்லாமல் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல, இதில் அவர்களுக்கு ஒரு நல்ல வருமானமும் வரத்தொடங்கிவிடுகிறது.

அத்துடன் கல்லூரி விழாக்களில் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுபவர்களாகவும் இவர்கள் மாறிவிடுகிறார்கள்... என்பது கூடுதல் இன்பமான விஷயமாகிவிடுகிறது. இவை மட்டுமே டிக் டாக் என்றால் கூட பிரச்சினை எழுந்திருக்காது. இதில் இளைய தலைமுறையினர் செய்யும் சேட்டைகள் வரம்புகளைக் கடந்த ஆபாசமாக இருப்பதே டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும் என்ற சமூக குரலாக மாறியதற்கான காரணமாகும்.

ஆபாசங்களும், ஆபத்துகளும் அரைகுறை ஆடைகளும், அங்க சேட்டைகளும் கொண்ட நடனத்தை அரங்கேற்றுவது, பாலியல் ஆசைகளை தூண்டும் விதமான முகபாவங்களை வெளிப்படுத்துவது உதட்டை பிதுக்கியும், விழிகளை சுழற்றியும் அந்தரங்கத்தில் கணவனோடோ, காதலனோடோ வெளிப்படுத்தும் பாவங்களை பொதுவெளியில் படையலிடுவது.. போன்றவை கடும் விமர்சனத்திற்கு உள்ளாயின.

இது இவர்களுக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்களை பெற்றுத் தருகிறது. தர்மபுரி பாலக்கோடு கடமடை கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இது போன்ற டிக் டாக் பதிவுகளை போட.. அதை தொடர்ந்து ரசித்துப் பார்த்த திருநெல்வேலி வாசுதேவநல்லூரை சேர்ந்த இளம்பெண் தன் வீட்டாருக்கே சொல்லாமல் அந்த வாலிபரை தேடி அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இது போலீஸ் வழக்காகி, பெண் மேஜராகாத காரணத்தால் பெற்றோருக்கே மீட்டுத்தரப்பட்டார்.

இளம்பெண்கள் ஆர்வக்கோளாராக பதிவிடும் சாதாரண பதிவுகள் கூட பெரும் சர்ச்சையாகி குடும்பமே சீரழியும் நிலைக்கு சென்றுவிடுகிறது.
இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் தன் தோழிகளுடன் புர்கா போட்டவண்ணம் ஒரு பாட்டுப்பாடி டிக் டாக் பதிவு போட, அதை பார்த்த அதே மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை ஆபாசமாக திட்டி பதிவு போட அந்த பெண்ணின் குடும்ப வாழ்க்கையே கேள்விக்குறியானது. இத்தனைக்கும் அதில் சிறிதும் ஆபாசமாக பேசவோ, நடந்து கொள்ளவோ இல்லை. 

சில பெண்கள் இதுபோன்ற சூழல்களில் தற்கொலை செய்துகொள்ளும்  சம்பவங்களும் நடந்துள்ளன.  மதுரை உயர் நீதிமன்றத்தில் டிக் டாக்கை தடை செய்ய வழக்கு தொடுத்த வழக்கறிஞர் முத்துகுமார் இதுவரையில் டிக் டாக் பயன்பாட்டால் 400 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

எவ்வளவு லைக்குகள் வருகின்றன, எவ்வளவு பின்னூட்டங்கள் வருகின்றன என்பதில் போதையாகி எந்த எல்லைக்கும் சென்று பதிவிடும் போக்குகள் தலைதூக்கிவிடுகின்றன. இவை இளைய தலைமுறையை இயல்பு நிலையிலிருந்து பிறழவைக்கின்றன. மொத்தத்தில் தன்னுடைய அந்தரங்க ஆசையை வெளிப்படுத்தும் பொறுப்பின்மையும், மற்றவர்களுடைய அந்தரங்கத்தை அறிய விரும்பும் அற்பத்தனமும் டிக் டாக்கில் கைகோர்ப்பதே பெரும் விபரீதங்களுக்கு வித்திடுகிறது.

டிக் டாக்கால் சில நன்மைகளும் நடக்கின்றன. ஒருசிலரிடம் மறைந்திருக்கும் அற்புதமான திறமைகள் வெளிப்படுவதற்கான வடிகாலாகவும் இது உதவுகிறது. ஒரு குடியிருப்பு பகுதியில் எப்படி தூய்மை பணி அனைவராலும் ஒருங்கிணைந்து செய்யப்பட்டது என்ற ஒரு பதிவு பெரும் வரவேற்பு பெற்றதோடு, அதுபோல வேறுபல இடங்களில் அந்த மாதிரி நடப்பதற்கும் வழிசெய்தது.

இணைய தொழில்நுட்ப வல்லுனர் செழியனிடம் பேசியபோது, ‘‘இதை பயன்படுத்துபவர்கள் செய்யும் சேட்டைகள் தர்மசங்கடமாக இருக்கிறது என்பது ஒருபுறமென்றாலும், மறுபுறம் தவறு செய்யும் அரசியல்வாதிகளை கிண்டல் அடித்து டிக் டாக் போட்டு தட்டிக் கேட்பதற்கும் இளந்தலைமுறை தவறுவதில்லை. பெரிய, பெரிய ஊடகங்கள் கேட்கத் தவறிய அல்லது கேட்கத் தயங்கும் கேள்விகளை இந்த சிறுசுகள் துணிச்சலாக போகிற போக்கில் டிக் டாக்கில் அலட்சியமாக கேட்டு கேள்விக்குறியாக்குவதும் நடக்கிறது’’ என்றார்.



Next Story