வீரத்துறவி சுப்பிரமணிய சிவா...!


வீரத்துறவி சுப்பிரமணிய சிவா
x
வீரத்துறவி சுப்பிரமணிய சிவா
தினத்தந்தி 23 July 2019 7:32 AM GMT (Updated: 23 July 2019 7:32 AM GMT)

இன்று (ஜூலை 23-ந் தேதி) தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழகத்தில் வாழ்ந்த மறக்க முடியாத தியாக சீலர்கள் மூவர். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனத்தை கண்டு அஞ்சிடாமல் அவர்களை தீரமுடன் எதிர்த்து போராடிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சிறைச்சாலையில் நோய்கொடுமைக்கு ஆளான போதிலும் கலங்கிடாமல் விடுதலை சிந்து பாடிய தியாகி சுப்பிரமணிய சிவா, தன் பாட்டுத்திறத்தாலே சுதந்திரக் கனலை மக்கள் மத்தியில் மூட்டி வெள்ளையனை அஞ்சி நடுநடுங்க செய்த மகாகவி பாரதியார் ஆகியோர். அவர்களின் ஒருவரான சுப்பிரமணிய சிவாவை எவரும் மறக்க முடியாது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ராஜம் அய்யருக்கும், நாகம்மாளுக்கும் மகனாக 1884-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி பிறந்தார்.

சிறு வயதில் வறுமையில் வாடியதால் திருவனந்தபுரம் சென்று இலவசமாக உணவு படைக்கும் விடுதியில் தங்கி சில காலம் இருந்தார். அங்கிருந்தபோது அவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தனது உள்ளத்தில் பொங்கிய தேச பக்தியை கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். 1906-ம் ஆண்டில் கவர்னர் ஜெனரல் கர்சன் பிரபு வங்கத்தை மத ரீதியாக இரண்டாக பிளந்த போது நாட்டில் இந்த பிரச்சினைக்காக கடும் எதிர்ப்பு கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் வந்தே மாதரம் எனும் சுதந்திர வேட்கை கிளம்பியது.

அச்சமயம் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி கப்பல் கம்பெனி தொடங்கினார். வ.உ.சி.யோடு சிவாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர்களின் சுதேசி உணர்வினை தன் சுதேச பாடல்களால் பாரதியார் தூண்டிவிட்டார். சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் சிவாவும் வீர உரையாற்றினார். அவருடைய பேச்சில் அனல் வீசியது.

அச்சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபுன் சந்திரபால் தொடர்ந்து வருகை தந்து சொற்பொழிவு ஆற்றியது இருவருக்கும் சுதந்திர தாகம் பீறிட்டு வந்தது. 1907-ல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் திலகர் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழக்கமிட்டார். அதுமட்டுமல்ல, தூத்துக்குடி கோரவ்மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்.

தென் மாவட்டங்களில் சுதந்திர வேட்கை பரவி வருவதை பொறுத்துக்கொள்ளாத ஆங்கிலேய அரசு, வ.உ.சி., சிவா உள்பட பலர்மீது வழக்கு தொடர்ந்தது. அதில் வ.உ.சி.க்கு தீவாந்தர தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு சேலம் சிறையில் 6 ஆண்டுகாலம் தண்டனையும் கிடைத்தது. இவருடைய சிறை வாழ்க்கையில் அவர் அனுபவித்த துன்பங்கள் சொல்லில் வடிக்க இயலாது. சிறையில் இவருக்கு கிடைத்த பரிசுதான் தொழுநோயாகும். இதனை அவர், “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை” என்று ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையான சிவா சென்னை மயிலாப்பூரில் தங்கினார். இங்கிருந்தபோது தன்னுடைய ஒரு தொண்டரை அழைத்துக்கொண்டு மேஜை, நாற்காலி, அதோடு பெட்ரோமாக்ஸ் விளக்கு எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு சென்று மக்கள் அதிகமாக கூடும் ஒரு இடத்தில் மேஜையை போட்டு, அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் பாரதியாரின் பாடல்களை பாடி கூட்டத்தை கூட்டுவார். கூட்டம் கூடியதும் சுதந்திர தாகத்தை உணர்ச்சியோடு மக்களுக்கு ஊட்டுவார்.

இவர் மிகச்சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் கூட. ஞானபானு என்ற பெயரில் பத்திரிகை நடத்தியவர். பாரதியாரும், வ.வெ.சு.ஐயரும் அப்பத்திரிகையில் எழுதிவந்தார்கள். அதற்கு பிறகு பிரபஞ்ச மித்திரன் என்ற பெயரிலும் பத்திரிக்கை நடத்தினார்.

மீண்டும் 1921-ல் இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையான பின்னர் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததால் மிகவும் வருத்தம் அடைந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பாரபட்டி எனும் கிராமத்தில் பாரத மாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப பெரிதும் முயன்றார். அதற்காக விடுதலை வீரர் சித்தரஞ்சன் தாசை கொல்கத்தாவிலிருந்து வரவழைத்து 1923-ல் அடிக்கல் நாட்டினார்.

சுப்பிரமணிய சிவா தொழுநோயால் பாதிக்கப்பட்டதினால் அவரை ஆங்கிலேய அரசு ரெயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல் பாப்பாரபட்டிக்கு கால்நடையாக வந்து சேர்ந்தார். இவருக்கு வயது ஆகவில்லை என்றாலும் தொல்லை தரும் கொடிய வியாதியினாலும் ஆங்கில அரசின் கொடுமையினாலும் கால்நடை பயணம் செய்ததால் அவர் மிகவும் சோர்ந்து போனார்.

பாரதமாதா கோவில் கட்டுவதற்கு சிரமப்பட்டு நிதியையும் திரட்டினார். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் உள்பட அனைத்து மதத்தினரும் சாதி, மத பேதமின்றி வழிப்படுவதற்கினிய ஆலயமாக பாரதமாதா ஆலயத்தை கட்ட கடும் முயற்சி எடுத்தார். அதற்காகவே உடல் முழுவதும் புண்ணாக இருந்தபோதும் உடலை துணியால் போர்த்திக்கொண்டே சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும், கட்டை வண்டியாலும் சென்று மேடை தோறும் சுதந்திர கனவை மக்களுக்கு ஊட்டியதை மறக்க இயலாது.

தமது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரதமாதா ஆசிரமத்திற்கு வந்தார் சிவா. அங்கு தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்த அவர், 1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி தனது 41-வது வயதில் நம்மை விட்டு பிரிந்தார். அந்த வீரத்துறவி சுப்பிரமணிய சிவாவை என்றும் மனதில் வைத்து போற்றுவோமாக. வாழ்க அவரது புகழ்.

- கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

Next Story