தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி


தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2017 10:30 PM GMT (Updated: 11 Jan 2017 8:17 PM GMT)

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை,

நல்ஒழுக்கம் கற்பிக்க பயிற்சி


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 60 வகையான நல் ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.

அதன்படி முதல் முறையாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அதன் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஏற்பாட்டில் நேற்று பயிற்சி தொடங்கியது. பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசிரியர்கள் நியமனம்


பள்ளிக்கூடத்திற்கு மாணவ-மாணவிகள் அவர்கள் சார்ந்துள்ள மதத்தை பின்பற்றி அந்த சின்னத்தை உதாரணமாக விபூதி, குங்குமம், சிலுவை, பர்தா ஆகியவை அணிந்து வருவதில் தவறு இல்லை. இதுகுறித்து 4 புகார்கள் வந்தன. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மதத்தின் சின்னத்தை அணிந்து வருவது அவர்களின் நம்பிக்கை. எனவே மாணவர்கள் அணிந்து வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம்.

அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு உடனே நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே 30 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இப்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை கணக்கெடுத்து வருகிறோம். கணக்கெடுத்தபிறகு காலியாக உள்ள ஆசிரியர்கள் பணிக்கு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 8 ஆயிரம் உள்ளன. அந்த பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

அரசு நலத்திட்டங்கள்


பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அரசு திட்டங்களும் முறையாக சென்று அடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பணியிடங்களும் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

முன்னதாக ஆசிரியர் பயிற்சி தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் ராகுல்நாத், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் க.அறிவொளி, ச.கண்ணப்பன், ரெ.இளங்கோவன், அ.கருப்பசாமி, மு.பழனிச்சாமி, இணை இயக்குனர் வை.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story