காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள்


காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள்
x
தினத்தந்தி 4 Feb 2017 2:30 AM IST (Updated: 4 Feb 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

கிருஷ்ணகிரி

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

காதலர்களின் சின்னம் ரோஜா 

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14–ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வழங்கி அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். இதில் காதலர்களின் சின்னமான ரோஜாப்பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜாக்கள் பயிரிடப்பட்டுள்ளன. ரோஜா சாகுபடியில் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என மொத்தம் 2 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 

இதில் 40–க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் ஓசூர் பகுதியில் பயிரிடப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் சாகுபடி செய்யப்படும் ரோஜாக்கள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு சீதோஷ்ண நிலை சீராக இருந்ததால் ரோஜாக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி உள்ளது. இதையடுத்து காதலர் தினத்திற்காக ரோஜாக்களை அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு சுமார் 4 கோடி ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.

வெளிநாடுகளில் ஒரு ரோஜா பூவுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை கிடைக்கிறது எனவும், ஒரு கட்டு பூக்கள் ரூ.200 வரை விற்பனையாகிறது எனவும் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.


Next Story