நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி


நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2017 7:31 PM GMT (Updated: 25 Feb 2017 7:31 PM GMT)

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

திருச்சி

தொடர் போராட்டம் 

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததையடுத்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பார்வையிட்டார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் விவரத்தை கேட்டறிந்தார்.

பேட்டி 

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு நிலத்தடியில் சுமார் 6 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து எடுக்கக்கூடியது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நிலம் உப்பு தன்மையுடையதாக மாறும். 80 கிலோ மீட்டருக்கு பாதிப்பு ஏற்படும். இந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டும்

இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) பிரதமரை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த சந்திப்பின்போது முக்கிய பிரச்சினையாக நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் விவகாரத்தை முன்வைக்க வேண்டும்.

இதுபோன்ற எரிவாயு சோதனைகளை பாலைவனம், கடலோரப் பகுதியில் தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர, மக்கள் வசிப்பிடங்களில் மேற்கொள்வதை அரசு தவிர்க்க வேண்டும்.

திசை மாற்ற முயற்சி 

மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. இதனால் தற்போது ஹைட்ரோ கார்பன் என பெயரிட்டு மக்களை திசை மாற்ற, மத்திய அரசு முயற்சிக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்களின் விருப்பம் தான் இறுதியாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக எதையும் அவர்களிடத்தில் திணிக்கக்கூடாது.

மனித உயிருக்கும், விவசாயத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடிய இந்த திட்டத்தை கைவிட்டு, மக்கள் ஏற்கும் திட்டங்களையும், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களையும் மட்டுமே மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story