இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: நெடுவாசலில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு


இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு:  நெடுவாசலில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 27 Feb 2017 7:59 PM GMT)

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 12-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

போராட்டத்தை தீவிரப்படுத்த பொதுமக்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம்

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் எனும் கிராமத்திலும் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அங்கு இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16-ந் தேதி நெடுவாசல் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

இத்திட்டம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு, வடகாடு கல்லிக்கொல்லை, வாணக்கன் காடு, தற்காகுறிச்சி, நெடு வாசல் அருகே நல்லாண்டார்கொல்லை ஆகிய கிராம பகுதிகளில் விவசாயிகளிடம் பல ஏக்கர் நிலத்தை ஓ.என். ஜி.சி. நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது. அந்த நிலங்களில் எண்ணெய் வளங்கள் பற்றி ஆய்வு செய்யப்போவதாகவும், மண்எண்ணெய் எடுக்கப்போவதாகவும் அப்பகுதி விவசாயிகளிடம் கூறினர். மேலும் அந்த நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய், எரிவாயுவை எடுத்து சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் ஆழ்குழாய்களில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்களை அடைத்துவிட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் சென்றுவிட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

இந்நிலையில்தான் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை அறிந்து, அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவ, மாணவிகளும், இளைஞர்களும், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் நெடுவாசல் போராட்ட களத்திற்கு வந்தவாறு உள்ளனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று 12-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. நெடுவாசலில் உள்ள நாடியம்மன் கோவில் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுவாசல் குளமங்கலம், மாங்காடு, வடகாடு, ஆலங்குடி, ஆவணம், புள்ளான்விடுதி, கீரமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி, வாணக்கன்காடு, வெட்டன்விடுதி, கறம்பக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

இதைத்தொடர்ந்து அவர்கள் முன்னிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திரைப்பட நடிகை சோனியா, இயக்குனர் பாண்டிராஜ், டி.வி. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் புஷ்பராஜ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

தீர்மானங்கள்

* இயற்கை எரிவாயு எடுக் கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் இருந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது.

* இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர முடிவு.

* தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்தை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

* தமிழகத்தில் உள்ள காவிரி பாசன பகுதிகளை ஒருங்கிணைந்த வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

* இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசால் வழங் கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்பட அனைத்து அடையாள அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது.

* நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்ட தலைநகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.

* நெடுவாசல் பகுதியில் உள்ள அனைத்து பெண்களும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய வீட்டின் முன்பு அகல் விளக்குகளை ஏற்றி போராட்டம் நடத்துவது.

* நெடுவாசல் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்துவது.

* ஒவ்வொரு ஊராட்சியின் சார்பிலும் ஒவ்வொரு நாளில் நெடுவாசலில் தொடர்ந்து போராட்டம் நடத்துவது.

* அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டி, இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

* சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பது.  மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர் போராட்டம்

இதற்கிடையே நெடுவாசலில் நாடியம்மன் கோவில் அருகே உணவு தயாரிக்கப்பட்டு, கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நெடுவாசல் பஸ் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் காலை முதல் தர்ணா போராட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றின் அருகே விவசாயிகள் தற்காலிக தகர கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

கல்லூரி மாணவர்கள்

நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆங்காங்கே கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி, கறம்பகுடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையடைப்பு போராட்டம்

இதற்கிடையே இயற்கை எரிவாயு எடுப்பதை கண்டித்து நாளை(புதன்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று வர்த்தக கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Next Story