ஜெயலலிதா சமாதியில் ஜெ.தீபா தியானம்


ஜெயலலிதா சமாதியில் ஜெ.தீபா தியானம்
x
தினத்தந்தி 13 March 2017 5:15 AM IST (Updated: 13 March 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா சமாதிக்கு சென்று ஜெ.தீபா நேற்று தியானம் மேற்கொண்டார்.

சென்னை, 

அப்போது அவர் தான் தொடங்கிய பேரவையின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், நான் தேர்தலில் போட்டியிட கூடாது என்பதற்காக சதி செய்கிறார்கள் என்று கூறினார்.

உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியலில் குதித்த அவரது அண்ணன் மகள் தீபா ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற பெயரில் பேரவையை தொடங்கினார். அப்பேரவையின் பொதுச்செயலாளராகவும் பதவி ஏற்றார். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்தநிலையில் சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செயல்படும் பேரவையின் தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தார். தனது வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை பேரவையின் பொறுப்பாளர்களுக்கு நேற்று காலை வழங்கினார்.

ஜெயலலிதா சமாதிக்கு வருகை

இந்தநிலையில் நேற்று இரவு 8.20 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தீபா நேற்று தனது கணவர் மாதவன் மற்றும் ஆதரவாளர்களுடன் திடீரென வந்தார். அங்கு ஜெயலலிதா சமாதியில் பேரவை உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் ஜெயலலிதா சமாதி அருகே அமர்ந்து திடீர் தியானத்தில் ஈடுபட்டார். இரவு 8.25 மணிக்கு தொடங்கிய அவரது தியானம் இரவு 9.25 மணி வரை நீடித்தது. பின்னர் அங்கிருந்து தீபா காரில் புறப்பட்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சதி

ஜெயலலிதாவுக்கு முதலில் இவர்கள் (டி.டி.வி.தினகரன்) என்ன செய்தார்கள்?. என்ன சிகிச்சை அளித்தார்கள்?. எதற்காக இதெல்லாம் நடந்தது? என்பதையே விளக்கவில்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என்ற செய்தி தெரிந்தவுடன், உறுதிபட அதை நான் தெரிவித்த நாள் முதல் பல்வேறு தொல்லைகளை எனக்கு மறைமுகமாக அளித்து வருகிறார்கள்.

என் இல்லத்தில் என்னால் இருக்க முடியவில்லை. கூலிப்படையினரை ஏவி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் யார்? என்றே எங்களுக்கு தெரியவில்லை. யாரை கேட்டாலும் இவர்கள் பெயரை தான் குறிப்பிடுகிறார்கள், அதுவும் மறைமுகமாக. நான் இந்த தேர்தலில் போட்டியிடகூடாது என்பதற்காக பல சதிகளை தீட்டி வருகின்றனர்.

நல்ல பதிலை மக்கள் அளிப்பார்கள்

இதெல்லாம் போதாதென்று சொந்த அண்ணனின் மகளான என் மீது, என் அத்தை என்னை பெயரிட்டு ஒரு குழந்தையை போல பராமரித்து வந்திருக்கிறார். எனக் கும் அவருக்கும் ஒரு தாய்க்கும், மகளுக்குமான நெருக்கமும், பாசமும், பந்தமும் உள்ளது.

இவர் யார்? இவருக்கு குறை கூற என்ன அதிகாரம் இருக்கிறது? இதெல்லாம் போதாதென்று அரசியல் சாயமும் பூச முயற்சி செய்கிறார்கள். இவர்களுக்கு நல்ல பதிலை தமிழக மக்கள் விரைவில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் நான் இங்கு வந்தேன். இவர்கள் பற்றிய பல உண்மைகள் வெளிவரும். இதை நான் உறுதிபட தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெ.தீபா அளித்த பதில்களும் வருமாறு:-

மறைமுக தொல்லைகள்

கேள்வி:- உங்களுக்கு நேரிடையாக அச்சுறுத்தல் எதுவும் வந்ததா?

பதில்:- நேரிடையாக எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. மறைமுகமாக பல தொல்லைகளை அளித்து வருகின்றனர்.

கேள்வி:- உங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பீர்களா?.

பதில்:- என் பாதுகாப்பு குறித்து எனக்கு பயமோ, அச்சமோ இல்லை. ஆனால் இவர்களை மக்கள் நிச்சயம் கேள்வி கேட்டாக வேண்டும். நேற்று ஒரு தனியார் தொலைக் காட்சி பேட்டியில் டி.டி.வி. தினகரன் பேட்டியளிக்கையில், ‘சசிகலா தான் முதல்-அமைச்சர் பதவிக்கு உரியவர்’, என்று குறிப்பிட்டுள்ளார். இவரை எப்படி தமிழக மக்கள் முதல்- அமைச்சராக ஏற்றுக்கொள்வார்கள்? தேர்தலில் போட்டியிட்டு அந்த இடத்துக்கு வந்தால், அப்போது கூட ஏற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.

இன்று மக்களை சந்திப்பேன்

முன்னதாக நேற்று மாலை தீபா தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’-ன் பொறுப்பாளர்கள் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும். ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். மக்களின் விருப்பத்திற்காகவே நான் போட்டியிடுகிறேன். நாளை (இன்று) ஆர்.கே.நகர் தொகுதி மக்களை சந்தித்து பேச இருக்கிறேன். ‘இரட்டை இலை’ சின்னத்தில் நான் போட்டியிடுவதற்கான சூழல் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story