ரூபெல்லா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள் சட்டசபையில் அமைச்சர் வேண்டுகோள்


ரூபெல்லா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள் சட்டசபையில் அமைச்சர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 March 2017 4:30 AM IST (Updated: 22 March 2017 12:04 AM IST)
t-max-icont-min-icon

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள் என்றும் சட்டசபையில் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா (தி.மு.க.) தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசி திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்தார். அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்து கூறியதாவது:–

தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசி

தமிழ்நாடு தடுப்பூசி போடுவதில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் பச்சிளம் குழந்தைகள், தாய்க்கு ஏற்படக்கூடிய ரணஜன்னி, தொண்டை அடைப்பான், கக்குவான் போன்ற நோய்கள் தமிழ்நாட்டில் மறைந்து விட்டன. கடந்த 12 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறோம். தற்போது தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது.

ரூபெல்லா நோய் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்டால் பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறைபாடுடன் பிறக்கும். மூளை வளர்ச்சி குறைபாடு உள்பட பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படும். எனவே இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த தடுப்பூசியை போடுவதற்கு வலியுறுத்தி வருகிறோம்.

9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயத்திற்கு உட்பட்டவர்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும். இந்த தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது. எந்த பக்கவிளைவுகளும் இல்லாதது. எனவே இது குறித்து வரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து தடுப்பூசி போடுங்கள்.

31–ந்தேதி

1.75 கோடி குழந்தைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ஒரு கோடியே 54 லட்சம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போட்டு இருக்கிறோம். இந்தியாவில் இந்த நோயால் ஆண்டிற்கு 40 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 50 ஆயிரம் பேர் இறக்கிறார்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த நோயை இந்தியாவில் இருந்து விரட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள்.

வரும் 31–ந்தேதி வரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள், பள்ளிகளில் இந்த தடுப்பூசி போடப்படும். ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த தடுப்பூசி வழக்கமான தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும்.

இவ்வாறு  அவர் கூறினார்.
1 More update

Next Story