தினகரன், தேடப்படும் நபராக அறிவிப்பு டெல்லி போலீசார் கைது செய்ய தீவிரம்


தினகரன், தேடப்படும் நபராக அறிவிப்பு டெல்லி போலீசார் கைது செய்ய தீவிரம்
x
தினத்தந்தி 19 April 2017 10:56 AM IST (Updated: 19 April 2017 10:55 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி போலீசார் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று டி.டி. வி.தினகரனை தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை போலீசார் நேற்று வெளியிட்டனர்


சென்னை,

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் இடைத் தரகர் சுகாஷ் என்ற சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப் பட்டது. 2 கார்களும் கைப்பற் றப்பட்டன.

சுகேசிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசிய தினகரன் முதல் கட்டமாக ரூ.10 கோடியை ஹவாலா மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் கொடுத்தான். இதையடுத்து அவனது செல்போன் தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது டி.டி.வி. தினகரனுடன் இடைத்தரகர் சுகேஷ் கடந்த 15-ந்தேதி பலதடவை பேசியிருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டி.டி.வி.தினகரனிடம் நேரில் விசாரணை நடத்தவும் டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று சென்னை வருவார்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நேற்று டெல்லி போலீசார் வரவில்லை.

இடைத்தரகர்  சுகேஷ் சந்திரசேகரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதால் கூடுதல் ஆதாரங்களுடன் சென்னை வர டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது சுகேஷ் மூலம் ஓரளவு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே டெல்லி போலீசார் நாளை சென்னை வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லி போலீசாருக்கு நேற்று ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், “டி.டி.வி.தினகரன் வெளிநாட்டு குடியுரிமை பெற்று இருப்பவர். எனவே அவர் வெளிநாட்டுக்கு சென்று விட கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று டி.டி. வி.தினகரனை  தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

இதற்கிடையே இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறை முகங்களுக்கு டெல்லி குற்றப் பிரிவு போலீசார் டி.டி.வி. தினகரன் பற்றிய தகவல்களை அனுப்பி  உள்ளனர். விமானம் மற்றும் கப்பல் மூலம் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக  உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தினகரன் மீதான டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகள் இறுகி வருகிறது. டெல்லி போலீசார் சென்னை வந்து விசாரிக்கும் போது  தினகரன் கைது செய் யப்படுவார் என்று கூறப்படுகிறது.
1 More update

Next Story